
புத்ரா ஜெயா, ஏப். 7 – பல ட்ரிலியன் டாலர் இழப்பை பதிவு செய்த
அமெரிக்கச் சந்தையின் வீழ்ச்சி உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார
நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக மலேசியா தயார்
நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நம்பிக்கையூட்டும் தரவுகளுடன் நாடு தொடர்ந்து வலுவான பொருளாதார
அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும் வரி விதிப்பு மற்றும்
அமெரிக்காவுடனான வர்த்தக உறவு உள்ளிட்ட எதிர்பாராத நிகழ்வுகள் மீது
உரிய கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கான நமது ஏற்றுமதி மதிப்பு அதிகமானது. செமிகண்டக்டர்
ஏற்றுமதி மட்டும் 10,000 அமெரிக்க டாலரை எட்டும். நாட்டின் மொத்த
செமிகண்டக்டர் ஏற்றுமதியில் 65 விழுக்காட்டை இது பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவுடனான நமது வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்
தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்து வருகின்றன என்று அவர்
சொன்னார்.
இன்று இங்கு பிரதமர் துறை பணியாளர்களுடனான சந்திப்பு நிகழ்வின்
போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் துணைப்
பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும்
டத்தோஸ்ரீ பாடில்லா யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
bernama

