
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப்ரல் 12-
செந்தூல் கேடிஎம் குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கு 42,000 வெள்ளியில் மாடி வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்த ஓய்டிஎல் மேம்பாட்டு நிறுவனம் 12 ஆண்டுகள் ஆகியும் வீடுகளை கட்டி தரவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் இன்று போர்க்கொடி உயர்த்தினர்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் கேடிஎம் குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கு 21 மாடிகள் கொண்ட வீடுகளை கட்டி தருவதாக ஓய்டிஎல் நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது.
மூன்று ஆண்டுகளில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி கொடுத்தது என்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி ஈஸ்வரி தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அப்போது நிறுவப்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற விளம்பர அறிவிப்பு பலகை அப்படியே உள்ளது.
ஆனால் இதுவரை எந்தவொரு வீடும் கட்டப்படவில்லை என்று அவர் சொன்னார்.
இப்போது எங்களுக்கு வாக்குறுதி கொடுத்த இடத்தில் வீடுகள் கட்டப்படவில்லை.
மாறாக வேறு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளில் குடியேறும் படி மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டது.

ஆனால் இந்த புதிய வீடுகளை பார்க்க அனுமதி இல்லை. உள்ளே செல்லவும் அனுமதி இல்லை.
நிபந்தனை அடிப்படையில் வீடுகளை தருகிறோம் என்று நிறுவனம் கூறுகிறது.
இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்களிடம் மகஜரை வழங்கினர்.
மகஜரை பெற்றுக் கொண்ட பிரபாகரன் இந்த விவகாரம் தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறினார்.
பல ஆண்டுகளாக இந்த மக்கள் வீடு கிடைக்குமென்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் எந்தவொரு பதிலும் இல்லை. ஆகவே இவர்களுக்கு நியாயம் கிடைக்க சம்பத்தப்பட்ட தரப்பிடம் பேசுவேன் என்றார் அவர்

