உடல் கேமரா அணியத் தவறினால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை!

பணியில் இருக்கும்போது உடலில் அணிய வேண்டிய கேமராக்களை (Body Camera) அணியவோ அல்லது செயல்படுத்தவோ தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புக்கிட் அமான் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநர் சஹாபுடின் அப்துல் மனான் எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் போலீஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள 7,000-க்கும் மேற்பட்ட இந்த கேமராக்கள், காவல் துறையின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகவும் பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோந்து மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுகளுக்கு இந்த உடல் கேமராக்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு மேலும் 10,000 உடல் கேமராக்களுக்கு விண்ணப்பிக்க போலீஸ் படை திட்டமிட்டுள்ளதாகவும் சஹாபுடின் அப்துல் மனான் குறிப்பிட்டார்.

இதனிடையே, குடிநுழைவுத் துறையின் நெறிமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதன் அதிகாரிகளுக்கு சுமார் 600 உடல் கேமராக்கள் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles