
கோலாலம்பூர், மே 9 – மோசடி கும்பல்கள் சாதாரண மக்களை மட்டும் குறி வைப்பதில்லை. மாறாக பிரபலங்களிடமும் தங்களின் வேலையைக் காட்டி வருகின்றன.
அப்படியொரு மோசடிக்கு ஆளாவதிலிருந்து நாட்டின் பூப்பந்து சகாப்தமான டத்தோ லீ சோங் வேய் தப்பியுள்ளார் .
கைப்பேசிக்கு அழைத்தவர் தனது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண்களையும் சரியாக சொன்னது அவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அந்நபர் மலாக்காவில் உள்ள ஒரு மோசடி நடவடிக்கையில் டத்தோ லீ சோங் வேய் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த சோங் வெய், இந்த விஷயத்தை காவல்துறையிடம் புகார் செய்வதாகக் கூறி, அமலாக்க அதிகாரி என்று அழைக்கப்படுபவரின் அலுவலக முகவரியைக் கோரியுள்ளார். உடனே, அழைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
தாம் சற்று விழிப்பாக இல்லாமல் இருந்திருந்தால் மோசடிக்கு ஆளாகியிருக்கக் கூடும் என குறிப்பிட்ட சோங் வேய், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
எனவே, முன்பின் தெரியாதவர்களிடம் அடையாள அட்டை எண்களையோ வங்கிக் கணக்கு விவரங்களையோ கடவுச்சொல்லையோ கொடுக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார்.