
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
துப்பாக்கிகள் மவுனமாகி அமைதி நிலவும் இந்த நேரத்தில், நாட்டுக்காக தங்களது உயிரை கொடுத்தவர்களை கவுரவிக்க வேண்டும். இதனால், மற்றவர்களும் அமைதியை உணர்வார்கள். மூவர்ண கொடியின் மீது கடமை நிறைந்த இதயங்களுடன், ஆபத்தை எதிர்கொள்வதில் அசைக்காமல் உறுதியாக நின்ற நமது துணிச்சலான ஆயுதப்படைகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
நீங்கள் எப்போதும் விழிப்புடன், எப்போதும் துணிச்சலுடன், நமது எல்லைகளையும் மற்றும் நமது அமைதியையும் காப்பது இந்தியாவின் பெருமை. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருக்கும் நமது சகோதரர்களுக்கு உள்ள நிலைத்தன்மை அசாதாரணமானது. உங்களால் நாடு பெருமை கொள்கிறது. இந்திய ஒற்றுமையின் மிகப்பெரிய சக்தியை கண்டோம். மாநிலங்கள், மொழிகள் மற்றும் சித்தாந்தங்களை கடந்து, நாம் ஒன்றிணைந்து வலுவாக வெளிப்பட்டோம்.
இந்திய அரசாங்கத்தின் உறுதியான பதிலடிக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். பயங்கரவாதத்தின் முன் இந்தியா வளைந்து கொடுக்காது என்பதை இந்தியா இந்த உலகிற்கு தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வலிமையான நாடு என்பது சிந்திக்கும் நாடு.
இது வெற்றிக் கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. மாறாக, வலிமையான இந்தியாவிற்கு சேவை செய்வதற்கான, கற்றுக்கொள்ள, மீண்டும் வலுப்படுத்த, கட்டியெழுப்ப, சிந்தித்து பார்ப்பதற்கான நேரம் இது.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
thanks – dinakaran