
கோலாலம்பூர் மே 15-
தமிழர் தேசிய துயர நாட்களில் ஒன்றான மே 17ஆம் நாளில் பினாங்கு மாநிலத்தில் திரைத்துறை கலைஞர்களுக்கு விருது விழா நடைபெற இருப்பதை வன்மையாக கண்டிப்பதாக உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத கொடுங்கோல் அரசின் இனவழிப்பின் 2009 ஆண்டு மே மாதம் இறுதி கட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது உலகமறியும்.
அதில் குறிப்பாக மே16,17,18லில் உக்கரமாக கொடூரமாக கொத்து கொத்தாக கொல்லப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பிணக்குவியலாக காணப்பட்டன.
அதிலும் மே16,17 நாட்களில் உணவின்றி மருத்துவமின்றி உதவுவதற்கு எவருமின்றி மாண்டவர்கள் பல்லாயிரம் பேர்கள்.
தாயகத்தின் தாய்த் தமிழ் உறவுகளே முற்று முதலுமாக கொன்றொழைத்தது மே 18 ஆம் நாள் என்றாலும், அந்த வாரம் முழுவதும் தமிழர்கள் அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டு உயிர் இழந்த நாட்கள் ஆகும்.
ஆகவே அந்த வாரம் முழுவதும் உலகத் தமிழர்களுக்கு துயர நாட்களாகும். இருப்பினும் குறைந்தபட்சம் குறிப்பாக மே16,17,18 ஆம் நாட்களில் தமிழர்கள் விழாக்கள், கொண்டாட்டம், அறுசுவை உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மே18 தமிழகத்தில் நடிகர் விஷால் தலைமையிலான இசை திருவிழா கொண்டாட்டமும் மே17 இசைஞானி இளையராஜா அவர்களின் இசை கச்சேரி நிகழ்ச்சியும் உணர்வாளர்கள் கோரிக்கைக்கு இணங்க தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்களை உலகத் தமிழர்கள் துயர நாளாக அனுசரிக்கும் வேளையில், தற்போது பினாங்கில் விருது விழா நடத்தப்படுவது உலகத் தமிழர்களுக்கு மன வலியையும் மலேசியத் தமிழர்களுக்கு மரியாதை இன்மையுமான செயலாகும்.
எனவே, உலகத் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த நாட்களில் நடைபெறும் விருது விழா தவிர்க்கப்பட வேண்டும் அல்லது தேதி மாற்றம் செய்யப்பட வேண்டுமென அவ்விழா ஏற்பாட்டாளர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கேட்டுக் கொள்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தமதறிக்கையில் தெரிவித்துக் கொண்டார்.

