
ஈப்போ, மே. 19- புந்தோங் ஐ ஆர் சி திடல் விவகாரத்தில் முறையாக திட்டமிடாமல் செய்தததின் விளைவால் தற்போது அத்திடலின் மேம்பாடு திட்டங்கள் இழுபறி நிலையில் இருந்து வருவதாக புந்தோங் வாழ் மக்கள் தங்கள் குமுறலை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
இந்த திடலை மேம்படுத்துவதற்கு முன்னதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர்,கவுன்சிலர்கள், ஈப்போ மாநகர் மன்ற அதிகாரிகள், திடலை பயன்படுத்துவோர் மற்றும் ஐ ஆர் சி கிளப் நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து கலந்தோலோசித்து செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இவ்விவகாரத்தில் ஒரு சிலரின் தனிப்பட்ட சுயநலத்தால் இத்திட்டம் நாசமாகி போய்விட்டது என்று உறுதியுடன் கூறமுடியும்.
இந்த திடல் மேம்மாட்டிற்கு 390.000.00 ரிங்கிட் மானியத்தை ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுத் தந்தார்.
இந்த திடல் ஈப்போ மாநகரின் பராபரிப்பில் இருப்பதால் அனைத்து மானியமும் ஈப்போ மாநகர் மன்றத்திற்கு அரசாங்கம் வழங்கியது.
அவற்றில் 184,000 ரிங்கிட் திடல்
மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 196,000.00 ரிங்கிட் திடல் வசதிகளை மேம்பாடு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குறிப்பாக, திடல் சுற்றிலும் விளக்குகள் பொருத்துதல் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் அமைக்கும் திட்டங்களாகும்.
இருப்பினும், முதலில் இந்த திடலை சீரமைப்பு செய்ய 182,000.00 ரிங்கிட்டுக்கு விண்ணப்பம் செய்த பூமிபுத்ரா குத்தகையாளருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த குத்தகையாளர் துணை குத்தகயாளரை நியமனம் செய்து வெறும் 82,000.00 ரிங்கிட் மட்டுமே வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
அந்த விலைக்கு ஏற்றாப்போலதான் திடலை சீரமைப்பு செய்தனர். அதன் விளைவு, மழை பெய்தால் உடனே வெள்ளக்காடாக திடல் உருமாறியது.
திடலில் நீர் ஓட்டம் இல்லை. அப்படியென்றால் என்ன மேம்பாட்டை அந்த குத்தகையாளர் செய்தார் என்று புந்தோங் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதன் விளைவால் மற்றொரு நிதி ஒதுக்கீட்டை ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் நிறுத்தி விட்டார். அவர் ஐ.சி.யு இலாகாவிற்கு உண்மை நிலவரத்தை தெளிவாக விளக்கி தற்காலிகமாக மற்றொரு நிதியான 196,000.00 ரிங்கிட்டை நிறுத்தி மக்கள் பணத்தை காப்பாற்றினார்.
இவ்விவகாரத்தில் முழுக்க முழுக்க தவறு செய்தவர்கள் ஈப்போ மாநகர் மன்றும் என்றால் அது மிகையாகாது. ஆகையால், இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் சாக்குபோக்கு சொல்லாமல் முறைப்படி செய்யவும். இல்லயேல் புந்தோங் வாழ் மக்கள் ஈப்போ மாநகர் மன்ற கட்டத்தின் முன் வாசலில் பெரிய அமைதி மறியல் செய்யவும் தயங்க மாட்டோம் என்று புந்தோங் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

