

கோலாலம்பூர் மே 30-
உலக வாணிப மையத்தில் கடந்த மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் வரை 42 ஆம் ஆண்டு அனைத்துலக புத்தகக் கண்காட்சி விழா மிகப்பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தகங்கள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து 42 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் புத்தக கண்காட்சி விழாவில் குயில் ஜெயபக்தி நிறுவனம் பங்கேற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்தார்.
டேவான் மெர்டேக்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன கூடாரத்தில் குயில் ஜெயபக்தி புத்தகங்கள்விற்பனையில் உள்ளன.
இம்முறை 258 நூல் நிறுவனங்களின் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
மேலும் 1,200 புத்தக முகப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரே தமிழ் புத்தகக நிறுவனமாக குயில் ஜெயபக்தி விளங்குவது பெருமை அளிக்கிறது என்று பிரபாகரன் தெரிவித்தார்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புத்தக விற்பனை முகப்பிடத்திற்கு இன்று சிறப்பு வருகை புரிந்த பிரபாகரனுக்கு குயில் ஜெயபக்தி உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
தமிழர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் குயில் ஜெயபக்தியின் தமிழ் பணியை பெரிதும் பாராட்டுகிறேன் என்று பிரபாகரன் தெரிவித்தார் .
இதனிடையே இந்த புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கான தேர்வு புத்தகங்கள், கதை, கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் உட்பட அனைத்தும் விற்பனையில் உள்ளன என்று டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.

