டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்தின் மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு காற்பந்து போட்டியில் மகா கணேசா ,ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளிகள் வெற்றி வாகை சூடின.

மஞ்சோங், ஜூன் 1-
இரண்டாவது ஆண்டாக மஞ்சோங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான காற்பந்து போட்டியை டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். இவர்களின் ஏற்பாடு மற்றும் சிறப்பான சேவையை கண்டு 25 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி செய்வதாக பேராக் மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் இந்நிகழ்வினை தொடக்கி வைத்தபோது மகிழ்ச்சியுடன் கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் காற்பந்து விளையாட்டின் அடித்தளம் என்று கருதலாம். ஆகையால், அவர்களிடம் திறன் உள்ளது, ஆனால் சக்தி என்ற நிதி இல்லை. ஆகவே, அவர்களுக்கு அரசாங்கம் உதவிட வேண்டும் என்ற அடிப்படையில் உதவிகள் செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

முடிவுகள் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படியிருக்குமானால் அதிகமான உதவிகளை அரசாங்கத்திடம் நாம் கேட்க முடியும்.

ஆகையால், நமது மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் சிறந்த படைப்புகளை செய்தால் அவர்களுக்கு உதவிகள் செய்ய தாம் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

பேராக் மாநிலத்தில் சிலம்பு கழகத்தின் விளையாட்டாளர்கள் நடந்து முடிந்த சுக்மா போட்டியில் 6 தங்கம் 4 வெள்ளி பதக்கங்கள் வென்று பேராக் மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர். இவர்களின் கடின உழைப்பு மற்றும் உன்னத நோக்கத்தால் இந்த வெற்றியை காண முடிந்தது.

ஆகவே, அவர்களை போன்று மற்ற விளையாட்டாளர்களும் செயல்பட்டு சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று அவர் நம்பிக் கையுடன் சொன்னார்.

தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் சிறந்த முறையில் உதவிகள் செய்து வருகிறார். அவர் எங்கள் சங்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தேவைகளை அறிந்து நிதியுதவி செய்து வருகிறார்.

அவருக்கு இவ்வேளையில் எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்தின் தலைவர் கோ.மகாலிங்கம் கூறினார்.

கடந்தாண்டில் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் 12 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவினார். இவ்வாண்டு 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவியதற்கு என்றென்றும் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களை மாநில மற்றும் தேசிய ரீதியில் விளையாட்டுத்துறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு எங்கள் இயக்கத்தினர் இந்திய மாணவர்களுக்கு சேவையாற்றி வருவதாகா அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை சித்தியாவான் மகா கணேசா தமிழ்ப்பள்ளி வென்றது.

இரண்டாவது இடத்தை ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி(ஏ) குழுவினர் வென்றனர். மூன்றாவது இடத்தை சுங்கை வாங்கி( 11) மற்றும் நான்காவது இடத்தை லாடாங் வால்புரோக் தமிழ்ப்பள்ளி வென்றது.

பெண்கள் பிரிவில் ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி வென்று சாம்பியனானது.

இரண்டாம் இடத்தை சுங்கை வாங்கி(11), மூன்றாம் இடத்தை பெருவாஸ் தமிழ்ப்பள்ளியும், நான்காம் இடத்தை லாடாங் வால்புரோக் தமிழ்ப்பள்ளியும் வென்றன.

இப்போட்டியில் சிறந்த விளையாட்டாளர்கள் சிறப்பு செய்து அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஆண்கள் பிரிவில், சிறந்த விளையாட்டாளராக தரன் ஞானசேகரன்( மகா கணேசா ), சிறந்த கோல்கீப்பர் சர்வின் யாதவகுமார்( மகா கணேசா), சிறந்த இளம் விளையாட்டாளர் பர்வின் ஜெகன்( மகா கணேசா) மற்றும் அதிக கோல் அடித்தவர் பிரிவில் லுக்கேஸ்வர்மன் முருகன் (ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி) 11 கோல்கள் அடுத்தவர்.

பெண்கள் பிரிவில், சிறந்த விளையாட்டாளர் தேவரக்‌ஷிதா நோகநாதன்( ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி); சிறந்த கோல்கீப்பர் ராஷிணி அரவிந்தன்( சுங்கை வாங்கி); சிறந்த இளம் விளையாட்டு மங்கை அனிஷா (சுங்கை வாங்கி) மற்றும் அதிக கோல் அடித்தவர் தனிஷா ஜிவநாதன்( பெருவாஸ் தமிழ்ப்பள்ளி) என்பது குறிப்பிடத்தக்கது.

மீபாவின் தலைவர் மற்றும் அவரது செயலவையினர் கலந்து சிறப்பித்தனர்.

அவர்களுடன் அஸ்தாக்கா சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் மற்றும் மஞ்சோங் மாவட்ட காற்பந்து சங்கத்தினரும், பிரமுகர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles