

மலேசியாவில் இப்போது உற்பத்தி , தோட்டம் , விவசாயம் , உணவகம் சேவைத்துறை மற்றும் கட்டுமானத் தொழில்களில் மிக கடுமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் பணியாளர்கள் இந்த பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு பிறக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது.
கோவிட்-19 தாக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிறகு தொழில்கள் புத்துயிர் பெற புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
அந்த வகையில் தொழில் திறன் வாய்ந்த இந்திய தொழிலாளர்களால் இதற்கு தீர்வு காண முடியும் என்று மலேசிய தொழில் வர்த்தகர்கள் பெரிதும் நம்புகிறார்கள்.
இந்திய மத்திய பிரதேசத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பராவாசி மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – மலேசியா மனித வள அமைச்சர் வி சிவகுமார் முன்னிலையில் மலேசியா – இந்தியா இடையே தொழில் திறன் தொழிலாளர் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துக் கொள்ளப்பட்டன.
சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் மற்றும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

