
பத்துகாஜா,ஜூன் 6- தன் மொழி,பண்பாடு மற்றும் கலையை போற்றுவதிலும் அதனை பேணி காப்பதிலும் தெலுங்கு சமூகம் முன்னெடுத்து வரும் ஆற்றல் மிகு செயல்பாடுகள் தனித்துவமானது என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.
அவ்வகையில்,கிந்தா தெலுங்கு சங்கமும் அதன் இலக்கில் வெற்றிகரமா செயல்பட்டு வருவதை அறியும் போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்களின் தொடர் நடவடிக்கைகளுக்கு தாம் தனது பங்களிப்பாக வெ.6 ஆயிரத்தை மானியமாகவும் வழங்குவதாகவும் அறிவித்தார்.
ஒரு இனத்தின் அடையாளமாய் விலங்கிடும் மொழி,கலை,பண்பாடு ஆகியவற்றை நாம் பேணி காப்பதோடு அதனை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி செல்ல வேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுதான் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு வித்திடும் என்றார்.
ஒவ்வொரு ஞாயிறும் இவ்வட்டாரத்தில் நடத்தப்படும் தெலுங்கு மொழி வகுப்பு அச்சமூகத்தின் இளம் தலைமுறை மற்றும் மாணவர்களிடையே அம்மொழியை ஆழமாய் விதைக்க வழிசெய்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளையில்,இன்றைய இளம் தலைமுறையில் பெரும்பான்மையோர் சொந்த மொழிக்கு அந்நியமாய் இருக்குகிறார்கள்.இது வருத்தம் அளிக்கிறது.ஆனால்,தெலுங்கு சங்கம் மேற்கொள்ளும் இந்த அரும்பணி இந்நாட்டில் தெலுங்கு சமூகத்திடம் அம்மொழிக்கு புத்துயிர் அளித்துள்ளது எனலாம்.
அதுமட்டுமின்றி,மாணவர்களிடையே விதைக்கப்படும் மொழி,பண்பாடு மற்றும் கலை நிச்சயம் நாளைய எதிர்காலத்தை அச்சமூகத்திற்கு நம்பிக்கையான அடித்தளத்திற்கு வித்திடும் எனவும் தெரிவித்தார்.
மலேசியா போன்ற பல்லினம் வாழும் நாட்டில் நாம் இந்தியர்களாய் ஒன்றுப்பட்டுள்ள நிலையில் தத்தம் தாய்மொழி,கலை,பண்பாடுகளில் பெரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும்,பேரா,சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் தெலுங்கு சங்கங்கள் திறன்பட இயங்குவதாகவும் அச்சமூகம் சிறந்த இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் கூறிய அவர் நாடு தழுவிய நிலையில் தெலுங்கு சமூகம் தங்களுக்கான அடையாளத்தை தொடர்ந்து மெய்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மானியத்தை பெற்று கொண்ட கிந்தா தெலுங்கு சங்கப் பொறுப்பாளர்கள் மாண்புமிகு சிவகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து சிறப்பும் செய்தனர்.

