அரசு நிலத்தில் 5 ஆண்டுகள் கோவில்கள் கட்ட தடையா? சிவநேசனுக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் கண்டனம்…

கோலாலம்பூர் ஜூன் 6-
பேராக் மாநிலத்தில் குறிப்பாக அரசு நிலத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கோவில்கள் கட்டுவதைத் தடை செய்யும் ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசனின் அறிக்கைக்கு மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சிவநேசனின் இந்த நடவடிக்கை நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வாகாது. மேலும் இனங்களுக்கிடையேயான பதட்டங்களை அதிகரிக்கும்.

பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்து, இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது

காடுகளை அழிப்பது, ரப்பர் மரம் நடுவது உட்பட மலாயா பொருளாதாரத்திற்கு அவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்த உண்மை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை யாராலும் புறக்கணிக்க முடியாது.

தொழிலாளர்களின் நலன் கவனிக்கப்படுவதையும் இந்திய சமூகம் அந்தப் பகுதியில் நிலைத்திருப்பதையும் உறுதி செய்யும் நோக்கில் தோட்டங்களில் கோவில்கள் தமிழ்ப்பள்ளிகள் , நூல் நிலையங்கள் கட்டப்பட்டன.

இது ஒரு வரலாற்று மரபாகும். மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் அடையாளத்தின் இதுவொரு பகுதியாகும்.

அதன் அடிப்படையில் சிவநேசனின் அறிக்கை முற்றிலும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையாக உள்ளது என்று அவர் சொன்னார்.

ஒரு தோட்டம் விற்கப்படுவதற்கு முன்பு அங்குள்ள கோவில் மற்றும் பள்ளிகளுக்கு சிறப்பு நிலம் வழங்கப்பட வேண்டும். இது காலங்காலமாக நடந்து வருகிறது.

ஆகவே மலேசியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.

ஆக இந்த விவகாரத்தில் பேராக் மாநில அரசாங்கம் ஒரு புதிய சுற்றறிக்கையை வரைய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles