
புத்ராஜெயா, ஜூன் 11 – தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தில் (PTPTN) கடன் பெற்றவர்களில் மொத்தம் 400,000 பேர் எந்தக் கடனையும் திருப்பிச் செலுத்தாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சாம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
மேற்கல்வியை முடித்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும், அவர்கள் அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். இதனால், நிலுவையில் உள்ள கடன் பாக்கி 5 பில்லியன் ரிங்கிட்டை எட்டியிருப்பதாகப் புத்ராஜெயாவில் நடைபெற்ற ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்தார்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பிரச்னையை எதிர்நோக்குவோருக்கு, தளர்வான திருப்பிச் செலுத்தும் முறை, மாத தவணைப் பண மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்து தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்திடம் கலந்துபேச வேண்டும்.
“கடன் பாக்கியை 100 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு என ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அவர்களால் இயன்ற அளவுக்கு தவணைப் பணமாக முறையாகக் கட்டி வந்தால் கூட போதுமானது ஆகும். அதிகாரிகள் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்” என டாக்டர் சாம்ரி கூறினார்.
bernama

