
அகமதாபாத் : அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 170 பேர் உயிரிழந்த நிலையில் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: அகமதாபாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு. அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இந்தியா துணை நிற்கிறது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் : அகமதாபாத் விமான விபத்து மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. விபத்தில் பிரிட்டன் நாட்டவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் மிகுந்த கவலை அளிக்கிறது. வேதனை நிரம்பிய தருணத்தில் விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்.
பிரதமர் மோடி :அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து செய்தியை கேட்டு வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விபத்தில் சிக்கியவர்களுடன் என் மனது உள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :அகமதாபாத்தில் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா போயிங் விமானம் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! எனது எண்ணம் முழுவதும் விமானத்தில் பயணித்தவர்களின் | குடுமபத்தினருடனே உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என நம்புகிறேன்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : அகமதாபாத் விமான விபத்து என்னுடைய மனதை வெகுவாக பாதித்துள்ளது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் உறவினர்களின் வலி கற்பனை செய்ய முடியாதது. இந்த கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அனைத்தும் அவர்களுடனேயே உள்ளது. அரசு நிர்வாகத்தின் மீட்பு மற்றும் உதவிகள் உடனடியாக தேவை. காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி : அகமதாபாத் விமான விபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுடன் என் மனது இருக்கிறது. இந்த கொடூர விபத்தில் இருந்து அனைவரும் மீண்டும் வர வேண்டும் என இந்த நாடே விரும்புகிறது. கடவுள் உங்கள் அனைவருடனும் இருக்கட்டும்

