
கோலாலம்பூர், ஜுன் 14-
நாட்டில் உள்ள உணவகங்களில் வேலை செய்ய வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான அனுமதி, அவசரமாக மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
அவர்களை விரைந்து பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கம் விரைந்து வழங்க வேண்டும் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டு, மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி என்ற சுரேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
உணவு மற்றும் பானங்கள் துறைக்கு போதுமான பணியாளர்கள் இல்லாததால் அத்துறை மிகுந்த அழுத்தத்தையும் நெருக்கடியையும் எதிர்கொண்டு வருகிறது.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் நாடு முழுவது உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தினேன்.
உணவகத் துறையில் தொடர்ந்து நிலவும் மனிதவள பற்றாக்குறை குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்பதை இவ்வேளையில் வருத்தத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.
உணவகங்களில் போதுமான தொழிலாளர்கள் இல்லாதது, குறிப்பாக, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாதது உணவகங்களின் சேவைத் தரத்தை உண்மையிலேயே நேரடியாக பாதிக்கிறது.
இந்நிலையில் உணவகங்கள் தங்களின் செயல்பாட்டுத் தேவைகளைச் சமாளிக்க தினமும் போராடி வருகின்றன.
போதுமான ஊழியர்கள் இல்லாததால் பலர் செயல்பாட்டு நேரத்தைக் குறைக்கவோ அல்லது உணவு பதார்த்தங்களை குறைக்கவோ கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது வியாபார நிலைத்தன்மையை மட்டுமல்ல, மலேசியாவின் சிறந்த உணவுக்குரிய இடமாக விளங்கும் மலேசிய உணவகங்களின் தோற்றத்தையும் வெகுவாக பாதிக்கிறது என்று டத்தோ சுரேஷ் குறிப்பிட்டார்.
மலேசியாவிற்கு வருகை தரும் 2026 ஆம் ஆண்டு நெருங்கிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மலேசிய உணவகங்களின் தோற்றம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
தூய்மை, செயல்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு பயிற்சி பெற்ற மற்றும் போதுமான மனித சக்தி தேவையை கடைசி நிமிடத்தில் திரட்ட இயலாது.
நாங்கள் தொழிலாளர்களை மட்டும் கோரவில்லை உணவகங்களில் வாடிக்கையாளர்களின் விருந்தோம்பல் முறைப்படி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு குறிப்பாக, சுகாதாரத் தரநிலைகள், கலாச்சார உணர்வு திறன் மற்றும் சேவைத் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இந்த அனுமதியை இப்போது கோருகிறோம்..
அவ்வாறு வழங்கினால் மட்டுமே அவர்களுக்கு போதுமான பயிற்சியை அளித்து, அடுத்த ஆண்டு, மலேசியாவிற்கு வருகைத் தரும் ஆண்டுக்கு முன்னதாகவே உணவகங்களில் போதுமான ஆள்பலம் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.
.

