



செ.வே.முத்தமிழ் மன்னன்
கிள்ளான், ஜூலை 1-
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகள் நலன்கள் காக்கும் பொருட்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி நடவடிக்கை குழுவை ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு அமைத்துள்ளார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி அனுமதியோடு இந்த நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி நடவடிக்கை குழுவின் தலைவராக அன்பழகன் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
உதவித் தலைவராக எஸ். எஸ். பாண்டியன், செயலாளர் சுகுமாறன், துணை செயலாளர் வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாளராக பிரான்சிஸ், துணை பொருளாளராக திருமதி விசாலெட்சுமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் திருமதி கேரல் ரிமா நியமனம் செய்யப் பட்டுள்ளார் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து போராடுவேன் என்று குறிப்பிட்ட அவர் குறைந்த மாணவர்களை கொண்ட தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனது முயற்சியின் பலனாக இப்போது 16 தமிழ்ப் பள்ளிகள் நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வு பிறந்துள்ளது.
எனக்கு முன்னர் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த டாக்டர் சேவியர் ஜெயகுமார் மற்றும் கணபதி ராவ் ஆகியோரும் ஏராளமான தமிழ்ப் பள்ளிகள் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டனர்.
சிலாங்கூர் மாநில அரசு எப்போதும் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகளுக்கும் உதவி புரிந்து வருகிறது. இந்த உதவிகள் தொடரும் என்றார்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் தலைவர் எஸ்.எஸ்.பாண்டியன் தலைமையில் கிள்ளான் WYNDHAM தங்கும் விடுதியில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் 41 ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எஸ். எஸ். பாண்டியன் தமது உரையில் சிலாங்கூர் மாநிலத்தில் 99 தமிழ்ப் பள்ளிகளில்
26,000 மாணவர்கள் படிக்கும் வேளையில்
2,000 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் என்றார்.
சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப் பள்ளிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருவதற்கு பாண்டியன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

