சிலாங்கூரில் 17 தமிழ்ப்பள்ளிகள்  எதிர்நோக்கும்  நிலப் பிரச்சனைக்கு  தீர்வு காண  நடவடிக்கை – பாப்பாராய்டு

ஷா ஆலம், ஜூலை 1- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 17 தமிழ்ப்பள்ளிகள் நிலப் பிரச்சனையை எதிர்நோக்கி வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு  கூறினார்.

அந்த பள்ளிகளின் நிலப் பிரச்சனைக்கு கட்டங் கட்டமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையில் நேற்று நான்கு பள்ளிகளின் நில விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது என அவர் சொன்னார்.

தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்பின் வாயிலாக இந்த நில விவகாரத்திற்கு  தமது பதவி காலத்திலேயே  உரிய தீர்வு காண தாம் முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டார்

நிலப்பிரச்சனையை எதிர்நோக்கும் பள்ளி நிர்வாகங்கள்  கல்வி அமைச்சின்
வாயிலாக அதற்கான விண்ணப்பத்தை செய்யும் படியும் பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.

மேம்பாட்டு நோக்கத்திற்காக தோட்டங்கள் எடுத்துக் கொள்ளப்படும் போது  மேம்பாட்டாளர்கள் 5 அல்லது 6 ஏக்கர் நிலத்தை பள்ளிக்காகக் கல்வி அமைச்சியிடம் ஒப்படைப்பர்.

அந்த நிலத்தைப் பெறுவதற்கு மாவட்ட கல்வி இலாகா வாயிலாகப் பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணியை பெற்றோர் ஆசிரியர் சங்கம் அல்லது மேலாளர் வாரியம் செய்ய இயலாது என அவர் விளக்கினார்.

கடந்த தவணையில் வீ.கணபதிராவ் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த போது 26 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் பெற்றத் தரப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் பெற்றுத் தருவதில் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமாரும் சிறப்பான பங்கினை ஆற்றியுள்ளார் என்றார்.

பாதிக்கப்பட்ட 17 பள்ளிகளுக்கும் எனது காலத்தில் நிலம் பெற்றுத்தர போராடுவேன். புதிய பள்ளிகளுக்கு  இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற பள்ளிகளையாவது காப்பாற்ற வேண்டும் என்பதே நமது தலையாய நோக்கமாகும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles