

கோலாலம்பூர் ஜூலை 7-
மலேசிய திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் கருங்கல் கோவிலாக கட்டும் திருப்பணி பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.
தற்போதுள்ள சிமிந்தி தூண்கள் அனைத்தும் முறையே அகற்றப்படும். அதற்கு பதிலாக கருங்கல் தூண்கள் நிறுவப்படும். இந்த கருங்கல் தூண்கள் அனைத்தும் வந்து விட்டதாக அவர் சொன்னார்.
வரும் நவம்பர் மாதத்திற்குள் திருப்பணி வேலைகள் பூர்த்தி அடைந்ததும் மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் என்றார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகம முறைப்படி கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்போது மீண்டும் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
கோவிலில் தூண்கள், 32 விநாயகர் பீடங்கள் மணி மண்டபம் அனைத்தும் கருங் கற்களால் கட்டப்பட உள்ளது.
நல்லுங்கள் வழங்கிய நன்கொடை மூலம் இந்த திருப்பணி வேலைகள் தொடங்குகிறது. மலேசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் விளங்குகிறது.
இந்த திருப்பணி வெற்றிபெற பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை வழங்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இன்று காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் திருப்பணி வேலையை டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
சிவஸ்ரீ சிவகுமார் மற்றும் சிவஸ்ரீ சிவனாந்தா குருக்கள் ஆகியோர் இந்த சிறப்பு பூஜையை நடத்தி வைத்தனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், சந்திரசேகரன் , நாராயணசாமி, டத்தோ சுரேஷ்குமார், பொருளாளர் டத்தோ அழகன், வாரிய உறுப்பினர் டாக்டர் முனியப்பா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

