
கோலாலம்பூர் ஜூலை 19-
நாட்டின் 13ஆவது மலேசிய பெருந்திட்டம் வரும் அக்டோபர் திங்களில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்திய சமுதாயத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளும் வகையில் அரசியல் சமூக பொருளாதார பரிந்துரைகளை முன் வைத்துள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார கல்வி மேம்பாடு குறித்து இத்தகைய முன்மொழிவுகளை ஒற்றுமை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மஇகா மத்திய செயலவை கூட்டம் நேற்று அதன் தேசிய தலைமையகத்தில் நடைபெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த பரிந்துரைகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மத்திய அரசாங்கத்திடம் குறிப்பாக பிரதமர் துறை அலுவலகத்திலும் பொருளாதாரத்துறை அமைச்சகத்திடமுமம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
13ஆவது மலேசிய பெருந்திட்டத்தின் மூலம் இந்திய சமுதாயம் மீட்சி பெறுவதற்கான இலக்குடன் இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மலேசிய இந்திய சமுதாயம் தேசிய நீரோடையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு பெறுவதற்கு ஏதுவாக இந்த பரிந்துரைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மலேசியர்களின் பாரம்பரிய அரசியல் இயக்கமான மஇகா சார்பில் கேட்டுக் கொள்வதாக விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அனுபவித்துவரும் சிறைவாசத்தின் மிச்ச காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பது குறித்து ஆரம்பம் முதல் அம்னோ முயற்சி மேற்கொண்டு வருகிறது; இதை மாயக்கா வரவேற்கிறது என்று தெரிவித்தார்.
பத்து மலை இந்தியன் செட்டில்மெண்ட் நிலப் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த விவகாரம் குறித்து கட்சி ஆழமாக பரிசீலிக்கும் என்றார்.

