
கோலாலம்பூர் ஜூலை 24-
இந்து சமயத்தை தொடர்ந்து இழிவுப்படுத்திய சர்ச்சைக்குரிய ஷம்ரி வினோத் மற்றும் பிர்டாவுஸ் மீது அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் ஆகியோர் அந்த நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆவர்.
ஷம்ரி வினோத் மற்றும் பிர்டாவூஸ் மீது நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என ஏஜிசி கூறிவிட்டது. இதனை பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா மக்களவையில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
ஏஜிசி எனப்படும் அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸின் இந்த முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
குறிப்பாக 3ஆர் விதிகள் என்பது ஒரு தனிப்பட்ட மதத்தினருக்கு மட்டும் தானா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில் தான் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் கட்சி பேதமின்றி இந்த இவ்விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறினர்.

