
கோலாலம்பூர் ஜூலை 28-
கடந்த சனிக்கிழமை தலைநகரில் நடைபெற்ற
துருன் அன்வார் பேரணியில் அதன் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமான மக்கள் கலந்து கொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால் மக்களிடையே அதிருப்தியும் விரக்தியும் அதிகரித்து வருகிறது என்பதே அடிப்படை செய்தி என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார்.
மக்கள் வேதனைப்படுகிறார்கள், அதிருப்தியின் குரல்கள், எண்ணிக்கையில் இடி முழக்கமாக இல்லாவிட்டாலும், மன உறுதியுடன் ஒலித்தன.
அன்வார் எதிர்ப்பு பேரணி என்பது அரசாங்கத்திற்கு எதிரான ஓர் அச்சுறுத்தல் அல்ல என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். மாறாக மக்களின் அதிருப்தியை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
மக்கள் நோகடிக்கப்பட்டுள்ளனர். அதிருப்தியின் குரல்கள் அதிகரித்துள்ளது. எண்ணிக்கையை காட்டிலும் மக்களின் குரல்கள் தான் முக்கியம்.
குறிப்பாக இந்திய சமூகம் பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. இது மக்களின் அலட்சியம் அல்ல.
ஆனால் இன்று பல இந்தியர்கள் அரசியல் ரீதியாக சோர்வடைந்து, பல ஆண்டுகால வாக்குறுதிகள், ஓரங்கட்டப்படுதல், முறையான புறக்கணிப்பு ஆகியவற்றால் சோர்வடைந்து உள்ளனர் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியர்கள் தெருக்களில் இல்லாததை திருப்தி என்று தவறாகக் கருதக்கூடாது.
இது ஒரு அமைதியான போராட்டம். நேர்மையாகவும் விரைவாகவும் கவனிக்கப்படா விட்டால் வாக்குப் பெட்டியில் சத்தமாக ஒலிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
நான் உட்பட பல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பி வருகிறோம்.
இதை நாடாளுமன்றத்திலும் சிறப்பு அமர்வுகளிலும் எழுப்பியுள்ளோம். குறிப்பாக இந்த அதிருப்தியை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் எல்லா வழிகளிலும் முயற்சித்தோம்.
ஆனால் சாதகமான பதில் இல்லாததால், நாங்கள் எதையும் செய்யவில்லை என்பதே மக்களிடையே கருத்து நிலவுகிறது.
நாங்கள் எங்கள் பங்கை முழு நேர்மையுடன் செய்திருந்தாலும், இது எங்கள் நம்பகத்தன்மையையும் களத்தில் உள்ள நற்பெயரையும் சேதப்படுத்துகிறது என்று அவர் வேதனையோடு குறிப்பிட்டார்.

