ஒவ்வொரு எழுத்தாளர் சங்கங்களும் எழுத்தாளர் கோமுவை நினைவுக்கூற வேண்டும் – கோமு புதுக்கவிதை பரிசளிப்பு விழாவில் வலியுறுத்து!!

ஈப்போ,ஆக27: கவிஞர் கோ.முனியாண்டி மலேசியப் படைப்புலகில் காலத்தையும் வென்று வாழும் மாபெரும் எழுத்தாளர்.மலேசியத் தமிழ் எழுத்துலகம் அவருக்கான பெரும் அங்கீகாரத்தை வழங்குவதில் தவறிவிட்டது என்றும் தன் எழுத்தால் காலத்தை வென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கோமு என அழைக்கப்படும் நவீன இலக்கியச் சிந்தனை சிற்பி கவிஞர் கோ.முனியாண்டியை ஒவ்வொரு எழுத்தாளர் சங்கங்களும் நினைவுக்கூற வேண்டும் என பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புரவலர் வழக்கறிஞர் ம.மதியழகன் நினைவுறுத்தினார்.

கோமு கவிஞர் மட்டுமல்ல அவர் சிறுகதை எழுத்தாளர்,நாவல் படைப்பாளர்,கட்டுரையாளர் என பன்முகம் கொன்ட மாபெரும் எழுத்தாளர்.அதுமட்டுமின்றி,இந்தச் சமூகத்தின் மீது பெரும் அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளர்.தன் எழுத்துகளால் மட்டுமின்றி களத்திலும் நின்று மக்களுக்காக போராடிய எழுத்து புரட்சியாளன் என்றும் கோமுவிற்கு புகழாரம் சூட்டினார் எழுத்தாளருமான மதியழகன்.

அதுமட்டுமின்றி,சித்தியவான்,ஆயீர் தாவார் வட்டாரங்களில் இலக்கிய நிகழ்ச்சிகளையும் பல எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளுக்கும் வித்திட்டவர் கோமு என்றால் அது மிகையாகாது.எழுத்தாளர்களுக்கு நம்பிக்கையை விதைத்த சக படைப்பாளர் அவர்.யார் வந்து நூல் வெளியீடு செய்ய கேட்டாலும்,இலக்கிய நிகழ்ச்சிகளை முன்னெடுக்க கேட்டாலும்,மறுக்காமல் செய்து கொடுக்கும் நல்ல மனிதர் எனவும் புகழாரம் சூட்டினார் மதியழகன்.

அவரது நினைவாக பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் வழக்கறிஞர் மதியழகனின் ஆதரவோடு நடைபெற்ற கோமு புதுக்கவிதை போட்டியின் பரிசளிப்பு விழாவில் தமிழ்நெஞ்சர் மதியழகன் இவ்வாறு கோமுவின் புகழ்பாடி அவரை நினைவுக்கூர்ந்தார்.

பலருக்கும் அவர்கள் வாழும் ஊர்தான் அடையாளம்.சிலர் மட்டுமே அவர்கள் வாழும் ஊரின் முகவரியாய் உயிர்பெறுவார்கள்.அப்படியொருவர்தான் கோமு.சித்தியவான்,ஆயூர் தாவார் போன்ற ஊர்களின் அடையாளமே கோமு என்னும் கோ.முனியாண்டிதான் என்பதை பெரும் கைத்தட்டல்களுக்கு மத்தியில் மதியழகன் கூறினார்.

மேலும்,ஒவ்வொரு ஆண்டும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இக்கவிதை போட்டியை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கான முழு ஆதரவை தாம் தொடர்ந்து வழங்குவேன் எனவும் உறுதி அளித்தார்.அதுமட்டுமின்றி,பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிவாலெனின் தலைமையில் எழுச்சியோடும் உத்வேகத்தோடும் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் இம்மாநிலத்தில் இன்னும் அதிகமான இலக்கிய முன்னெடுப்புகளைச் சங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

கோமு புதுக்கவிதை போட்டியை சங்கம் ஏற்று நடத்த வேண்டும் என்று தாம் கேட்ட போது மறுக்காமல் அதனை சிறப்பாக செய்து முடித்து பரிசளிப்பு விழாவையும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்திருப்பதை பார்க்கும் போது;
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்னும் குறளுக்கு ஒப்ப சரியான இடத்தில் தான் பொறுப்பை வழங்கியுள்ளேன் என்பதை எண்ணி மகிழ்கிறேன் என்றார்.

நடைபெற்ற கோமு புதுக்கவிதை போட்டியின் பரிசளிப்பு விழாவில் தலைமையுரையாற்றிய சங்கத்தின் தலைவர் சிவாலெனின் புதுக்கவிதை வானில் தன் எழுத்தால் இன்னமும் சிறகை விரித்து பறந்து கொண்டிருக்கும் கோமுவின் நினைவாக கவிதை போட்டியை ஏற்று நடத்தியதில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பெருமிதம் கொள்கிறது என்றார்.

போராளிகள் மட்டும் விதைக்கப்பட்டவர்கள் அல்ல.மாறாய்,படைப்பாளர்களும் இம்மண்ணில் விதைக்கப்பட்டவர்கள் தான்.விதைக்கப்பட்ட அவர்கள் இன்னமும் நம் மத்தியில் அவர்களின் படைப்புகளால் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.கோமு போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை எண்ணி ஒவ்வொரு எழுத்தாளனும் பெருமிதம் கொள்ள வேண்டும் எனவும் நினைவுறுத்தினார்.

அதேவேளையில்,படைப்பாளர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும்.அவர்கள் இல்லாத போது அவர்களை நினைவுக்கூர்வது என்பது காலம் கடந்த செயல் மட்டுமல்ல.அது வருத்தம் அளிக்கும் விடயமும் கூட.அந்த தவற்றை பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் செய்திருப்பதை மறுப்பதற்கில்லை.

இருப்பினும்,இனி வருங்காலங்களில் பேரா மாநில எழுத்தாளர்களைக் கொண்டாடுவதற்கும் அவர்களின் எழுத்துகான அடையாளத்தை மெய்பிக்கவும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊரில் தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவற்கான திட்ட வரைவையும் முன்னெடுத்துள்ளது என்பதையும் சிவாலெனின் தனதுரையில் குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த கோமு புதுக்கவிதை போட்டியில் முதல் பரிசை நாடறிந்த கவிஞர் மகேந்திரன் நவமணியும் இரண்டாம் பரிசை கவிஞர் கனகராஜனும் மூன்றாம் பரிசை எழுத்தாளர் காந்தி முருகனும் வென்றனர்.நான்காம் நிலையில் சுசிலா முனியாண்டி,ஐந்தாம் நிலையில் சாந்தா காளியப்பன்,ஆறாம் நிலையில் கோவி.மணிமாறன்,ஏழாம் நிலையில் நடராஜன் (நடா),எட்டாம் நிலையில் முனைவர் குமரவேல்,ஒன்பதாம் நிலையில் ஜெ.,இன்பநிலா மற்றும் பத்தாம் நிலை வெற்றியாளராக மதியழகனும் வெற்றி பெற்றனர்.

இக்கவிதைப் போட்டிக்கான முதல் பரிசு வெ.1500,இரண்டாம் பரிசு வெ.1000,மூன்றாம் பரிசு வெ.700 ரொக்கத்தோடு கேடயமும் வழங்கப்பட்ட நிலையில் 4 முதல் 10 வரையிலான ஆறுதல் பரிசாக வெ.100 தலா ஒருவருக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் சிறப்பாக நடந்தேறிய இப்பரிசு விழாவில் சங்கத்தின் மேனாள் தலைவர்கள்,ஆலோசகர்கள்,எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள்,வெற்றியாளர்கள் என திரளாக பலர் கலந்து கொண்டு பெருமை சேர்த்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles