கல்வித் திட்டங்களுக்கு கோத்தா கெமுனிங் தொகுதி வெ.100,000 ஒதுக்கீடு- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தகவல்

ஷா ஆலம், செப். 6- கல்விக்கு அதிக முன்னுரிமை வழங்கி வரும் கோத்தா கெமுனிங் தொகுதி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வித் திட்டங்களுக்காக ஆண்டு தோறும் ஒரு லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிட்டு வருகிறது.


எஸ்.பி.எம். மாணவர்களுக்கு தன்முனைப்பு பயிற்சி, தேர்வு வழிகாட்டிப் பயிற்சிகள், தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த மாணவர்களுக்கு ரொக்க அன்பளிப்பு, மடிக்கணினி போன்ற உபகரண விநியோகம், பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு தனிப்பட்ட உதவி, உள்ளிட்ட திட்டங்களை தொகுதி சார்பில் தாங்கள் அமல்படுத்தி வருவதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.
கல்வி வாழ்க்கையின் அடித்தளமாக விளங்குவதால் எந்த மாணவரும் கல்வியைப் பெறுவதிலிருந்து விடுபடக்கூடாது என்பதற்காக கல்வி சார்ந்த திட்டங்களுக்கு தாங்கள் அதிக முன்னுரிமை அளித்து வருவதாக அவர் சொன்னார்.


இத்தகையத் கல்வித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் ஆண்டு தோறும் 100,000 வெள்ளிக்கும் மேல் செலவிட்டு வருகிறோம். சிறந்த எஸ்.பி.எம். மாணவர்களுக்கு வெகுமதி அளிக்கும் திட்டத்திற்கு மட்டும் 48,000 வெள்ளி ஒதுக்கீடு செய்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. 14வது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.பி.எம். தேர்வு வழிகாட்டி கருத்தரங்கைத் தொடக்கி வைத்தப் பின்னர் மீடியா சிலாங்கூரிடம் அவர் இதனைத் தெரிவித்தார். ஷா ஆலம் ரோட்டரி கிளப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் 30 மாணவர்கள் பங்கேற்றனர்.


தொகுதியில் கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களை மேற்கொள்வதில் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து தாங்களுக்கு சிறப்பான ஆதரவு கிடைத்து வருவதாக பிரகாஷ் கூறினார். குறிப்பாக, ஷா ஆலம் ரோட்டரி கிளப் எங்களுக்கு சிறப்பான ஆதரவை வழங்கி வருகிறது. அண்மையில் டபள்யு. டபள்யு.ஆர்.சி. தொண்டு நிறுவனம் கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியது.

அதோடு மட்டுமின்றி எர்த் வாரியர் எனும் தொண்டு அமைப்பின் மூலம் கோத்தா கெமுனிங் தொகுதியில் நிலையான சுற்றச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.


கல்வியில் அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு அடித்தளமாக விளங்கும் எஸ்.பி.எம். தேர்வில் மாணவர்கள் சிறப்பான அடைவு நிலையைப் பெறுவதற்கு உதவும் நோக்கில் இந்த வழிகாட்டி கருத்தரங்கு நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.


இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வை எதிர் கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக இந்த சிறப்பு தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த பயிற்சிக்கு 30 மாணவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது ஒரு கூட்டுத் திட்டம் என்பதோடு இது தொகுதியின் முதல் முன்னெடுப்பாகவும் உள்ளதால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்வு வழிகாட்டிப் பயிற்சிக்கு மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து வரும் ஆண்டுகளில் தொகுதியிலுள்ள மாணவர்களை குறிப்பாக பி40 தரப்பினரை உள்ளடக்கிய தேர்வு மீள்பார்வை பயிற்சி மேலும் பெரிய அளவில் நடத்தப்படும் என அவர் சொன்னார்.


முன்னதாக, நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரகாஷ், மாணவர்கள் கட்டொழுங்குடன் இருக்கும் அதேவேளையில் கல்வியில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


தேர்வில சிறப்பான அடைவுநிலையை அடைய வேண்டுமானால் மாணவர்கள் சினிமா, நண்பர்களுடன் வெளியில் செல்வது போன்ற பொழுது போக்கு விஷயங்களைத் தியாகம் செய்ய வேண்டும்.
கல்வி மட்டும்தான் வாழ்க்கையில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வழி என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles