
கோலாலம்பூர் செப் 20- மலேசிய மண்ணில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 147- ஆவது பிறந்தநாள் விழா, கழகத் தலைவர் மானமிகு. நாக. பஞ்சு அவர்களின் தலைமையில், மலரும் 28.9.2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 2.00 மணிக்கு, கோலாலம்பூர்; பிரிக்பீல்ட்ஸ் பாடாங் பெலியா சாலையில் அமைந்துள்ள ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவை, மேனாள் தலைமை ஆசிரியர், மதிப்புமிகு. மு. கெங்கம்மாள் மலையரசன் அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றுவார்.
கழகத்தின் மதியுரைஞர், ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.
‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளுக்கேற்ப வரலாறு காணாத சமுதாய சீர்திருத்த மருத்துவர் தந்தை பெரியார் அவர்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த நமது சமுதாயத்தின் அவல நிலைகளைக் கண்டுப் பிடித்து, அதன் மூலகாரணங்களை ஆய்ந்து ‘பேதங்களற்ற சமத்துவ சமுதாயம்’ அமைத்திட பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பெண் கல்வி, பொருளாதாரத்தில் சிக்கனம், மூடநம்பிக்கை ஒழிப்பு, எழுத்துச் சீர்திருத்தம் என பயனுள்ள பல சமூகச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தனது இறுதி மூச்சுவரைப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களுக்கு விழா எடுப்பதில் மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் பெருமைக் கொள்கிறது.
கழகப் பொதுச் செயலாளர், அன்பரசன் சண்முகம் அவர்களின் வரவேற்புரையோடு தொடங்கும் இவ்விழாவில், கல்லூரி மாணவர்களின் சொல்லரங்கம், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, அறிவுப்புதிர் போட்டி என பல அங்கங்கள் இடம்பெறவுள்ளன.
எனவே, இவ்விழாவிற்கு கழகத்தோழமை இயக்கங்களும் கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதனையும் அழைப்பாக ஏற்று விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
தொடர்புக்கு; 0129424301 / 0122679180 / 0123965793
இக்கண்,
அன்பரசன் சண்முகம்,
பொதுச் செயலாளர், மலேசிய மாதிக.

