
ஜொகூர் பாருவில் ஒரு இனத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இரண்டு நாள் பயிலரங்கைக் கடுமையாகக் கண்டிப்பதாக மீரா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் தெரிவித்தார்.
மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கல்வி என்பது ஒரு பிரிவினைப் பொருளாகவே இருந்து வருகிறது.
நாம் உண்மையிலேயே “வளர்ச்சியடைந்த” நாடாக முன்னேற வேண்டுமானால், நமது கல்வி முறை முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, வாய்ப்பு மற்றும் நிறுவன நடைமுறை ஆகிய இரண்டிலும் சமத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
ஒரு புதிய நிர்வாகமும், புதிய கல்வி அமைச்சரும் ஒற்றுமை அரசாங்கத்தின் மூலம், நமது தேசத்திற்கான நியாயமான மற்றும் நீண்ட கால கல்விக் கொள்கையை மறுகட்டமைப்பதில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என்று பொதுவாக மலேசியர்கள் நம்பினர்.
இருப்பினும், கல்வியில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்படும் போக்கு இன்று வரை தொடர்ந்து வெளிவருகிறது.
பிற இனத்தைச் சேர்ந்த பலவீனமான மாணவர்களைப் புறக்கணித்துவிட்டு ஒரு இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் மீது மட்டும் கவனம் செலுத்துவது ஏற்க முடியாது.
ஒருவருடைய தோலின் நிறத்தைக் கணக்கில் கொள்ளாமல் கல்வியை வழங்க வேண்டிய கல்வி நிலையங்கள் இப்படி நடந்து கொள்வது கண்டித்தக்கது என்று அவர் சொன்னார்.

