

பத்துகேவ்ஸ், இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியைத்
தரம் உயர்த்தும் பணி வரும் மார்ச் மாதம் தொடங்கும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மொத்தம் 59 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் கீழ்
அப்பகுதியில் சாலை சீரமைப்பு மற்றும் சாலை விளக்குகளைப்
பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டம் வரும் மார்ச் மாதம் தொடங்கப்பட்டு மூன்று அல்லது நான்கு
மாதங்களில் முற்றுப்பெறும்.
இத்திட்டத்தின் மூலம் இங்குள்ள மக்கள் பயன்பெறுவர். இவர்கள்
அனைவரும் சுதந்திரத்திற்கு முன்பிருந்து இங்கு வசித்து வருகின்றனர்.
தானா மிலாயுவில் வேலை செய்த அவர்களுக்கு இங்கேயே வசிப்பிட
வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில்
பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் மண்டபத்தில்
நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாஸிட்
சாய்ரி, இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர் சங்கத் தலைவர்
வீ.சுப்பிரமணியம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

