



கோலாலம்பூர், செப் 30-
நவராத்திரியை முன்னிட்டு கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் சார்பில் நவசக்தி நவ விழா செந்தூல் தண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இவ்வாண்டு 52 ஆவது ஆண்டை முன்னிட்டு நவசக்தி நவ விழா 22-9-2025 ஆம் தேதி முதல் 2-10-2025 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது என்று இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 7ஆம் நாள் நவசக்தி நவவிழா உபயத்தை நடராஜா தலைமையிலான கோலாலம்பூர் ஹில்டன் விடுதி முன்னாள் இந்து பணியாளர்கள் ஏற்று நடத்தினர்.
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு வருகை தந்து விழாவில் கலந்து சிறப்பித்தார்.
டத்தோஸ்ரீ எம் சரவணன் உட்பட உபயக்காரருக்கு
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் பரிவட்டம் கட்டி கெளரவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வரும் கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் சமய பணியை டத்தோஸ்ரீ எம் சரவணன் வெகுவாக பாராட்டினார்.
இதனிடையே இன்று செப்டம்பர் 30 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் அக்டோபர் 1 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் வீதி ஊர்வலமும் நடைபெறுகிறது.
கோலாலம்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலாச்சார மையத்தின் இயக்குனர் ஸ்ரீமதி விஜயலெக்ஷ்மி சுந்தரராஜன் நாளை அக்டோபர் 1 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் விழாவில் முக்கிய பிரமுகராக கலந்து கொள்கிறார்.
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ஐ.ரமணி, துணை தலைவர் டாக்டர் தேவிகா, செயலாளர் அமரேசன், துணை செயலாளர் முருகராஜ், பொருளாளர் கருணாகரன், செயலவை உறுப்பினர்கள் மீனா, ஹேமாலதா, கண்ணன், ராமு, துளசி குணசேகரன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.