
கோலாலம்பூர், செப் 30-
Digital Services, Defense and Security Asia (CyberDSA 2025) கண்காட்சி மாநாட்டை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று மைக்டேக் மாநாட்டு மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
டிஜிட்டல் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்பு நிறுவனம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் .
மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில், 45 நாடுகளில் இருந்து வந்த 8,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிபுணர்கள் மற்றும் 15 நாடுகளைச் சேர்ந்த 150 கண்காட்சி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆசியாவையும் அதற்கு அப்பாற்பட்ட பகுதிகள் எதிர்நோக்கும் சிக்கலான இணையப் பாதுகாப்பு சவால்களை வெல்லும் நோக்குடன் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தாக்குதல்கள், சப்ளை செயின் பாதிப்புகள், செயல்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய அடித்தள வசதிகளுக்கான அச்சுறுத்தல்கள் — என்பது தூரத்திலிருக்கும் அச்சுறுத்தல்கள் அல்ல.
அவை தற்போது எதிர்கொள்ளும் சவால்கள். அவை தொடர்ந்து பரிணாம மாற்றத்திற்குட்படும் அபாயங்களாக கருதப்படுகின்றன.
இவை தேசிய பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கக் கூடியவையாகும்.
ஆக, திடமாக இவற்றை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வது, பொருளாதார முன்னேற்றத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அடித்தளம் ஆகும்.
இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையானது வணிகங்கள் வளர்வதற்கும், அரசு நல்லாட்சி புரிவதற்கும், குடிமக்கள் பாதுகாப்பாக டிஜிட்டல் மாற்றத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கிறது என டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
சைபர் பாதுகாப்பு மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கை, திறன் மேம்பாடு, எல்லை தாண்டிய ஒத்துழைப்பு, சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிற்கான தீர்வுகளை வழங்கும் ஒரு தளமாக CyberDSA செயல்படுகிறது.
CyberDSA 2025 கண்காட்சி மாநாடு, மலேசிய சைபர் செக்யூரிட்டி மற்றும் மலேசிய ஆயுதப் படைகளின் சைபர் தற்காப்பு மின்காந்தப் பிரிவோடு இணைந்து நடத்தப்படுகிறது.
இது நாட்டின் இலக்கவியல் மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
இலக்கவியல் அமைச்சு, தகவல் தொடர்பு அமைச்சு, தற்காப்பு அமைச்ச, தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் (NACSA), மலேசிய ஆயுதப் படைகள், அரச மலேசியா காவல்துறை மற்றும் மலேசியா மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் (MyCEB) ஆகியவற்றின் ஆதரவின் வழி இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
உலகத் தரம் வாய்ந்த சைபர் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேற்கொள்ளவும், புத்தாக்கத்தை மேற்கொள்ளும் மையமாக CyberDSA செயல்படவும், Aerosea Exhibitions Sdn. Bhd திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டதையும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பதிவு செய்தார்.