
ஈப்போ, அக் 4-
இங்குள்ள ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தின் முதன்மை சாலையில் சாக்கடைகள் மூடப்பட்டிருந்த சிமெண்ட் மூடிகள் திறந்து கிடந்தன.
இதனால், பெரிய ஆபத்தையும், அபாயத்தை இங்கு வருகையளிக்கும் மக்கள் எதிர்நோக்குகின்றனர் என்று சமூக ஆர்வலர் இர. மனோகரன் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சாலை குழிகளில் இங்கு வந்துபோகும் மக்கள் தவறி விழுந்தால், மற்றொரு மஸ்திட் இந்தியா துயரச் சம்பவம் இங்கும் ஏற்படலாம் என்று அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதன் பின் நடவடிக்கைகள் மேற்கொள்வது பயனற்ற செயல். ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் ஏற்பட்டுள்ள இச்சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது.
ஈப்போ மாநகர் மன்றத்தின் அதிரடி நடவடிக்கைகள் எங்கே? ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எங்கே? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன என்று அவர் சொன்னார்.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்க இங்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இத்தருணத்தில் மூடப்படாத இந்த சாக்கடை மூடியால் ஏதாவது அசாம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த பாதாள குழிகளில் மின்சார கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். அதே வேளையில் வேறு பயன்பாட்டிற்கும் இதனை பயன்படுத்தலாம். இருப்பினும் மக்கள் பாதுகாப்பு கருதி இந்த பாதாள குழிகள் மூடப்பட வேண்டும் என்று அவர் கருத்துரைத்தார்