இந்திய சமுதாயம்
பிச்சைக்கார
சமுதாயம் அல்ல! தமிழச்சி காமாட்சி ஆவேசம்

எதற்கு எடுத்தாலும் இந்திய சமுதாயம் போராடித்தான் தனது உரிமையை பெற வேண்டியுள்ளது.

இதற்காக இந்திய சமுதாயம் பிச்சை ஏந்தும் சமுதாயமாக முத்திரை குத்த வேண்டாம்.

நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்கள் உரிமையை கேட்கிறோம் என்று பகாங் மாநில சபாய் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழச்சி காமாட்சி நேற்று கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கிற்கு எடுத்துரைத்தார்.

தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் ஓர் தமிழர் இடம் பெற வேண்டும் என்பது எங்களது உரிமை.

இந்நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் மேம்பாடுகள் குறித்து பேசுவதற்கு தமிழ்ப் பள்ளியில் படித்த தமிழர் இந்த ஆலோசனை குழுவில் இடம் பெற வேண்டும்.

இது எங்களின் உரிமை. எதற்கு எடுத்தாலும் போராடிய பின்னரே எங்களுக்கான உரிமை வழங்கப்படுகிறது.

இதற்காக இந்திய சமுதாயத்திற்கு பிச்சை போடுகிறோம் என்று எண்ணி விடாதீர்கள் என்றார் அவர்.

நேற்று புத்ரா ஜெயாவில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது இதை நேரடியாக எடுத்து கூறினேன்.

மேலும் பகாங் மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவரிடம் சுட்டிக் காட்டினேன் என்றார்.

ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி இன்னமும் கொள்கலனில் உள்ளது. இதற்கு விரைந்து தீர்வு காணும்படி கல்வி அமைச்சரை கேட்டுக் கொண்டேன்.

மேலும் 37 தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழ்ப் பள்ளி மேலாளர்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இதற்கான சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தால் அந்த பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை கல்வி அமைச்சுக்கு எங்களால் கொண்டு வந்து தீர்வு காண முடியும் என்றும் எடுத்துரைத்தாக தமிழச்சி காமாட்சி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles