சமூக ஊடகங்களில் பரவும் தவறான சமயப் பொருட்கள் குறித்து எச்சரிக்கை!

மலேசிய இந்து சங்கத்தின், தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் அவர்கள், சமூக ஊடகங்களை மையமாகக் கொண்டு, தெய்வ உருவங்களை பயன்படுத்தி தவறான சமயக் கோரிக்கைகளுடன் பூஜை தொடர்பான பொருட்கள் விற்பனை செய்யப்படும் போக்கு அதிகரித்து வருவதைக் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறார். இந்த அறிக்கை, இந்து மரபுகள், உண்மையான சமய வழிபாட்டு முறைகள் மற்றும் பூஜையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் புனிதத்தைக் காக்கும் நோக்கில் வெளியிடப்படுகிறது.

“வசிய எண்ணெய்”, “வசிய குங்குமம்”, “வசிய தீர்த்தம்” போன்ற அதீத சக்தி அல்லது பிறரை ஈர்க்கும், கட்டுப்படுத்தும் வல்லமைகள் உள்ளதாகக் கூறி விற்பனை செய்யப்படும் பொருட்களின் அதிகரிப்பு மலேசிய இந்து சங்கத்தை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவை பெரும்பாலும் வணிக லாபத்திற்காக உருவாக்கப்பட்டவை ஆகும்; மேலும், ஈர்ப்பு, செல்வாக்கு அல்லது பிறரை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளுடன் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இத்தகைய கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்து சமய போதனைகளில் எந்த ஆதாரமும் இல்லை; அவை தர்மத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானவையாகும்.

பிறரை ஏமாற்ற அல்லது கட்டுப்படுத்தும் நோக்கில் பொருட்கள் அல்லது முறைகளை பயன்படுத்துவதை இந்து சமயம் எங்கும் ஆதரிக்கவில்லை என்பதையும், சமய நம்பிக்கைகளை லாப நோக்கில் சுரண்டுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால், பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்கும் போது மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக:

• பின்னர் அவமதிக்கப்படக்கூடிய அல்லது முறையற்ற வகையில் கையாளப்படக்கூடிய தெய்வ உருவங்கள் பதிக்கப்பட்ட பொருட்களை தவிர்க்கவும்.

• உறுதி செய்யப்படாத தகவல்கள், தெளிவற்ற கூறுகள் உள்ள பொருட்களை வாங்க வேண்டாம்.

• “உடனடி ஈர்ப்பு”, “அதீத சக்தி” அல்லது உறுதியான ஆன்மீக பலன் அளிப்பதாகக் கூறும் விளம்பரங்களால் ஏமாற வேண்டாம்.

இந்து சமய வழிபாட்டு முறைகளின் மரியாதையும் மேன்மையும் பாதுகாக்கும் நோக்கில், மலேசிய இந்து சங்கம் தனது வரம்பிற்குள் நீண்டகால நடவடிக்கைகளை படிப்படியாக ஆய்ந்து வலுப்படுத்தும். இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தல், பூஜை பொருட்களின் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் சமூக ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.

இந்து சமய வழிபாட்டின் தூய்மை, மரியாதை மற்றும் புனிதத்தைக் காப்பது அனைவரின் கூட்டு பொறுப்பாகும். இந்து சமயம் சுயக்கட்டுப்பாடு, மரியாதை மற்றும் உண்மையான ஆன்மீக வளர்ச்சியையே வலியுறுத்துகிறது. சமயச் சின்னங்கள் மற்றும் நம்பிக்கைகள் வணிக லாபத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுவது இந்த புனித மதிப்புகளை பாதிக்கிறது.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, தவறான அல்லது பொறுப்பற்ற சமயப் பொருட்களை ஆதரிப்பதைத் தவிர்க்குமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொள்கிறது. உண்மையான அறிவும் ஆன்மீக முன்னேற்றமும் கல்வி மற்றும் நடைமுறையால் மட்டுமே கிடைக்கும்.

ஞானத்திற்கோ வெற்றிக்கோ குறுக்கு வழிகள் இல்லை!

நன்றி.

ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் AMN., ASA
தலைவர்
மலேசிய இந்து சங்கம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles