பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத்தின் 39-ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் சனாதன தர்மத்திற்கெதிரான தீர்மானம் நிறைவேற்றம்

தாப்பா, 21-டிசம்பர் ; பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத்தின் 39-ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில், சனாதன தர்மத்தை நன்னெறி பாடத்தில் சேர்க்க வேண்டும் என்ற செனட்டர் லிங்கேசுவரன் அருணாச்சலம் அவர்களின் பரிந்துரை கண்டிக்கத்தக்கது என்றும், அது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் பேசுகையில், தேசியத் தலைவர் மானமிகு சா.இரா. பாரதி அவர்கள், சனாதன தர்மம் தமிழரால் உருவாக்கப்படாத அயலார் வழி புகுத்தப்பட்ட கோட்பாடு என்றும், அது சாதி, கல்வி பாகுபாடு, பெண்களுக்கு அநீதி, சமூக ஏற்றத்தாழ்வு போன்ற தீமைகளை ஏற்படுத்தியதாகவும் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலாக, மாணவர்களின் ஒழுக்கமும் மனிதநேயமும் வளர்க்கும் உலகப் பொதுமறை “திருக்குறளை” நன்னெறி பாடமாக பரிந்துரைக்க வேண்டும் எனவும், சனாதன போதனையை மீட்டுக்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் “மலேசியா மடானி” கோட்பாட்டில் பயணிக்கும் அரசாங்கம், இத்தகைய அர்த்தமற்ற கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என மாநாடு வலியுறுத்தியது.

பேராக் தாப்பா நகரில் நடைபெற்ற இந்த பேராளர் மாநாட்டிற்கு முன்பதாக, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 52-ஆம் நினைவு நாள் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார நிகழ்வுகளோடு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறியதென பேராக் மாநில ம.தி.க.வின் செயலாளர் மானமிகு இரா, கோபி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அபினயா சேத்ரா நடனக் குழுவினர் தமிழர் பாரம்பரிய பரதத்தையும் தமிழர்களின் பண்பாட்டு கலையான கோலாட்டத்தையும் படைத்தனர். அதோடு, தமிழ் இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் சிலம்பாட்டம் அரிமா சிலம்பக் குழுவினர் படைத்தனர். இது போன்ற தமிழர் கலை, பண்பாடு, கலாச்சார விடயங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் கடமையில் ஈடுபட்டிருக்கும் இவ்விரு குழுவினரின் தலைவர்களான தோழி சங்கீதா அவர்களுக்கும் மாஸ்டர் அன்பரசன் அவர்களுக்கும் மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக்கொள்ளும் அதே வேளையில் இது போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் மலேசியாவைச் சார்ந்த அனைத்து தமிழர் மற்றும் இந்தியர் இயக்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட பேராளர்களின் பிள்ளைகள் தங்களின் தமிழ்மொழி திறமையினை கவிதை வாசிப்பு, திருக்குறள் வாசிப்பு, தந்தை பெரியாரின் அறிவு சார்ந்த பொன்மொழிகள் வாசிப்பு போன்ற படைப்புகளை வழங்கி இந்நிகழ்வினை மேலும் மெருகூட்டச் செய்தனர். அனைத்து படைப்பாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் பணமுடிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

இளைய சமூகத்தினருக்கு வாய்ப்பழிக்கும் வகையில் இடைநிலைப்பள்ளி மாணவரான கோ. உதயன் அவர்களின் தொகுப்பில் இந்நிகழ்வு நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு மாநில செயலாளர் மானமிகு இரா. கோபி அவர்களின் வரவேற்புரை, மாநிலத் தலைவர் மானமிகு இரா. கெங்கையா அவர்களின் தலைமையுரை, தேசியத் தலைவர் மானமிகு சா. இரா. பாரதி அவர்களின் திறப்புரை, தேசியப் பொதுச்செயளாளர் மானமிகு பொன். பொன்வாசகம் அவர்களின் சிறப்புரை மேலும் இந்நிகழ்வில் சிறப்பு வருகை புரிந்த தேசியத் துணைத்தலைவர் மானமிகு மனோகர், ம.தி.க. கெடா மாநிலத் தலைவர் மானமிகு லலிதா குமாரி, ம.தி.க. சுங்கை சிப்புட் கிளைத் தலைவர் க. ஏலன் ஆகியோரின் கொள்கை உரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வு சிறக்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது என்று
இரா. கோபி
ஃ(செயலாளர்
ம.தி.க. பேராக் மாநிலம்) தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles