
சுங்கைபட்டாணி ஜன 5-
இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், பயிற்சி மற்றும் நிதி உதவி குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தஃபிக்குடன் இங்குள்ள இந்திய நல வாழ்வு நற்சேவை மன்றத்தினர் (IRCC) சுங்கைபட்டாணியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பரிந்துரையை முன் வைத்தனர்.
முன்னதாக நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிக் குழுவின் (APPGM) வழியே தொடரப்பட்ட திறன் வளர்ச்சிப் பயிற்சி திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையில், புதிய பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் அமைச்சருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ், “லயன் ஸ்மார்ட் என்டர்பிரைஸ்” நிறுவனத்துடன் இணைந்து 2026ஆம் ஆண்டில் குறைந்தது மூன்று நிகழ்ச்சிகளை நடத்த நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

2023ஆம் ஆண்டில் 3,000 பங்கேற்பாளர்களுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்ட “லயன் ரன்” நிகழ்வின் அனுபவத்தைக் கொண்டு, இளைஞர்களின் சாதனைகளை உயர்த்தும் வகையில் உலகத்தரமான விவரக்குறிப்புகளுடன் இந்த நிகழ்ச்சிகளை சுங்கை பட்டாணி உள்ளிட்ட கெடா பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கால்பந்தாட்டத்தில் சிறந்த திறமை கொண்ட யுவராஜ் விஜய்குமாரனுக்கு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் பொருத்தமான வேலைவாய்ப்பு வழங்குவது குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
2026 ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு பந்தல் அமைப்பதற்கான நிதி உதவியும் மேலும், 2026ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பந்தாய் மெர்டேக்கா பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கிற்கும் நிதி உதவி தேவை என்றும் அமைச்சரின் சந்திப்பு நிகழ்வில் கலந்துரையாடப்பட்டன.

