
மா.பவளம்
கோலாலம்பூர் ஜன 11-
மக்கள் முன்னேற்றக் கட்சியின் (பிபிபி) ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) வரும் ஜனவரி 18 இல் கோலாலம்பூர் உலக வர்த்தக மையம் (WTCKL) இல் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
தேசிய முன்னணி தலைவர் மற்றும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5,000-க்கும் மேற்பட்ட பிபிபி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கட்சியின் முதன்மை பிரிவு, இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு பிரதிநிதிகளும் அடங்குவர்.
டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டில் முக்கிய உரையை வழங்க உள்ளார்.
அந்த உரையில், பாரிசான் நேசனல் கூட்டணிக்குள் பிபிபியின் முக்கியத்துவமும் தொடர்ந்த பங்கும் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பொதுக்கூட்டம், PPPயின் அரசியல் திசையை நிர்ணயிக்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. குறிப்பாக, பிபிபியை மீண்டும் பாரிசானில் உறுப்பு கட்சியாக சேர்ப்பது தொடர்பான இறுதி முடிவை கட்சியினர் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது என்று அவர் சொன்னார்.
பொதுக்கூட்டத்தின் இரண்டாம் அமர்வில், பிபிபி உறுப்பினர்கள் 10 தீர்மானங்களை விவாதித்து முன்வைப்பார்கள். இவை கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள், தேசிய ஒற்றுமை, இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல முக்கிய தேசிய விடயங்களை உள்ளடக்கியவை.
அதில் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, கல்வி சீர்திருத்தம் தொடர்பாக அரச விசாரணைக் குழு (Royal Commission of Inquiry – RCI) அமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
இதன் மூலம், மலேசியா மக்கள் அனைவருக்கும் சமமான, உள்ளடக்கமிக்க மற்றும் நியாயமான கல்வி அணுகல் உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கோரப்படுகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

