
சென்னை, ஜன. 11-
அயலகத் தமிழர் தினம் 2026 – உலகத் தமிழர்களின் பெரும் ஒன்றுகூடல்!
ஆயிரம் ஆண்டுகளாக நாகரிகம், அறிவு, மரபு, மொழி ஆகியவற்றை வழிநடத்தி வரும் தமிழின் சிறப்பை கொண்டாடும் விழா இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.
திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடைபெறுகின்ற அயலகத் தமிழர் மாநாட்டில் மலேசியாவில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதில் பங்கு கொள்ளவும் தங்களின் தொப்புள் கொடி உறவை புதுப்பிக்கவும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பேராளர்கள் சென்னைக்கு அணி திரண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களுக்கு தமிழ் நாட்டு அரசு விருது வழங்கி சிறப்பித்தது.
உலகலாவிய நிலையில் 36 பேர் விருது பெற்ற நிலையில் இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் மக்கள் ஓசை செய்தி ஆசிரியரும் தாப்பா தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கத்தின் தோற்றுனருமான ராமேஸ்வரி ராஜாவுக்கு தமிழ்ச் சேவைக்கான விருது வழங்கி சிறப்பித்தார்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சங்கத்தின் அயலக தொடர்புத் தலைவருமான இராஜேந்திரன் பெருமாள், சின்னராசு (சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத் தலைவர்), சுப கதிரவன் (சித்தியவான் தமிழர் சங்கம்) ஆகியோரும் விருது பெற்றனர்.

