
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், ஜன 23-
தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் மலேசியத் திருநாட்டில் புகழ்பெற்ற பத்துமலை திருத்தலத்தில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டில் புகழ்பெற்ற Spritzer நிறுவனம் க்ளீன் தைப்பூசத்தை மேற்கொண்டு வருகிறது.
க்ளீன் தைப்பூசம் என்ற வாசகத்துடன் பத்துமலையை சுத்தம் செய்வதில் ஸ்பிரிட்சருடன் இணைந்து ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் இணைந்துள்ளது.
இது வெறும் சுத்தத்தை மட்டும் அல்லாமல், நீண்டகால சுற்றுச்சூழல் பொறுப்பை நோக்கி உறுதியான முன்னேற்றத்தை குறிக்கிறது.
இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த ஆண்டுகளாக சமூகத்திற்கு சேவை செய்து வரும் க்ளீன் தைப்பூச இயக்கத்தின் புதிய கட்டமாக, ஸ்பிரிட்சருடன் ஒரு மூலோபாய கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
க்ளீன் தைப்பூசத்தின் தாக்கம் ஏற்கனவே தெளிவாக காணப்படுகிறது. 2025 தைப்பூச விழாவின் போது, நூற்றுக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களின் உதவியுடன், 320 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகள் வெற்றிகரமாக சுத்தம் செய்யப்பட்டது.
முந்தைய ஆண்டுகளில் தைப்பூசத்திற்கு முன், போது மற்றும் பின் சுத்தத்தைப் பாதுகாப்பதே முக்கியமாக இருந்தது.
ஆனால் க்ளீன் தைப்பூசம் 2026, சுற்றுச்சூழல் பாதுகாப்பை பண்பாட்டும் ஆன்மீக மதிப்புகளின் ஒரு பகுதியாகக் கருதும் ஆழமான மாற்றத்தை குறிக்கிறது என்று ஒற்றுமை துறை துணை அமைச்சர் யூனிஸ் வரன் தெரிவித்தார்.
இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் மற்றும் மஹிமா தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் கலந்து சிறப்பித்தார்.
க்ளீன் தைப்பூசம் ஏற்பாட்டாளர் விக்னேஸ்வரன் கலியபெருமாள் மற்றும் Spritzer நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி Shoao Chan கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே கடந்த ஆண்டு தைப்பூசத்தில் மூன்று டன் எடை காலணிகள் சுத்தம் செய்யப்பட்டதாக டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.

