
பெட்டாலிங் ஜெயா, ஜன 28 – நாட்டில் பதிவுச் செய்யப்பட்ட அனைத்து கிரேப் ஓட்டுநர்களுக்கும், பெர்கெசோவின் கீழ் 15 விழுக்காடு பங்களிப்பை விரிவுப்படுத்த கிரேப் மலேசியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இச்சலுகையின் மூலம் முழு நேரம் மட்டுமின்றி பகுதி நேர ஓட்டுநர்களும் பயன் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
“முந்தைய காலத்தில் முழு நேர கிரேப் ஓட்டுநர்கள் பெர்கெசோவில் 30 விழுக்காடு பங்களிப்பைச் செலுத்தி வந்தனர். இதர ஓட்டுநர்களுக்கு 10 விழுக்காடு வழங்கினர். ஆனால், தற்போது அனைத்து ஓட்டுநர்களுக்கும் சமமாக 15 விழுக்காடு பங்களிப்பை வழங்க கிரேப் மலேசியா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது”, என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தை மேற்கொள்ள, இவ்வாண்டு சுமார் 5,000 ஓட்டுநர்களுக்கு, பி.டி.பி.கே எனப்படும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் மூலம் அரசாங்கம் கடனுதவி வழங்குவதாக ரமணன் தெரிவித்தார்.
“5,000 ஓட்டுநர்களுக்கு பயிற்சிகள் வழங்குவார்கள். இந்த பயிற்சிக்கு மனிதவள அமைச்சு மூலம் கடனுதவியை அனைத்து ஓட்டுநர்களுக்கும் வழங்குவோம். இதன் மூலம் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். மேலும், வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு அடுத்தக்கட்டத்திற்குச் செல்ல முடியும்”, என்று அவர் கூறினார்.
Bernama

