
கோலா சிலாங்கூர், ஜனவரி 28 – சமூக ஊடகங்களில் இந்து ஆலயங்களை “சட்டவிரோதக் கோவில்கள்” எனத் தன்னிச்சையாக முத்திரை குத்தும் போக்கைக் கட்டுப்படுத்தவும், இத்தகைய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மடாணி அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோலா சிலாங்கூர் கெஅடிலான் தொகுதித் தலைவர் தீபன் சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் நிலவி வரும் இத்தகைய தேவையற்ற விவாதங்கள் வெறும் உண்மைகளை மறைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் உருவெடுத்துள்ளன என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு சில தரப்பினர் உள்நோக்கத்துடன் கோவில்களை இழிவுபடுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும், இத்தகைய போக்கு மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்கள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டவை அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக, பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் தோட்டப்புறங்களில் அமைக்கப்பட்ட கோவில்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. அவை அந்த காலகட்டத்தில் சட்டபூர்வமாகவே இருந்தன.
இருப்பினும், கடந்த கால அரசாங்கங்கள் நிலப்பட்டா மற்றும் வர்த்தமானி (Gazette) விவகாரங்களை முறையாகக் கையாளத் தவறியதே இன்றைய நிலப் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
நிலம் தொடர்பான பிரச்சனைகளைச் சட்ட ரீதியாகவும், நேர்மையான முறையிலும் தீர்க்க வேண்டுமே தவிர, இணையதளங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் விமர்சிப்பது முறையல்ல என்று அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட, நாடு தழுவிய அளவில் ஒரு வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என அவர் யோசனை தெரிவித்தார். தற்போதுள்ள ஆலயங்களை முறைப்படுத்துதல், புதிய ஆலயங்களுக்கான அனுமதி மற்றும் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தேசியக் கொள்கை அவசியம் என்று அவர் கூறினார்.
Thanks Media Selangor

