

பத்து கேவ்ஸ், ஜன 29-
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கீழ் வரும் பத்துமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு முக்கிய சாலைகள் நாளை முதல் கட்டம் கட்டமாக மூடப்படவுள்ளன.
‘ஓப் பாலு 2026’ (Op Palu 2026) நடவடிக்கையின் கீழ், ஜனவரி 30-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை இந்தச் சாலை மூடல் அமலில் இருக்கும் என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் சி.பி டத்தோ பஹ்லவான் ஷாசெலி பின் டத்தோ கஹார் தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பின்வரும் சாலைகள் மூடப்படும் அல்லது திசை திருப்பப்படும்:
கம்போங் மிலாயூ பத்து கேவ்ஸ் (Kg. Melayu Batu Caves) போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பு,
MRR2 நெடுஞ்சாலையிலிருந்து பத்துமலைக் கோவிலுக்குச் செல்லும் நுழைவு வழி,
ஜாலான் பெருசஹான் (Jalan Perusahaan) சந்திப்பிலிருந்து பத்துமலைக் கோவில் நோக்கிய பாதை.
ஸ்ரீ கோம்பாக்கிலிருந்து ஜாலான் பெருசஹான் செல்லும் MRR2 வழித்தடம்,
ஜாலான் ஸ்ரீ பத்து கேவ்ஸ் (SBC 8) / ஜாலான் பத்து கேவ்ஸ் லாமா சந்திப்பு.
ஸ்ரீ பத்து கேவ்ஸ் (SBC) ஷெல் (Shell) பெட்ரோல் நிலையத்திற்கு முன்னால் உள்ள போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பு,
பத்து கேவ்ஸ் பைபாஸ் (Batu Caves Bypass) வழித்தடத்தில் இருந்து கோவிலின் பிரதான நுழைவாயிலில் செல்லும் பாதை ஆகியவை அடங்கும்
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புக்கிட் அமான்,
சிலாங்கூர் போலீஸ் மற்றும் இதர மாநில போலீஸ் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 1,520 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனுமதி இன்றி ட்ரோன்களை இயக்குபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நெரிசலைத் தவிர்க்க விரும்பும் வாகன ஓட்டிகள் டியூக் (DUKE) நெடுஞ்சாலை, என்.கே.வி.இ (NKVE), ஜாலான் கூச்சிங், ஜாலான் கோம்பாக் மற்றும் ஜாலான் சுங்கை துவா ஆகிய மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தலாம்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும், திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க வாகனங்களைச் சரியாகப் பூட்டிச் செல்லுமாறும் டத்தோ ஷாசெலி கேட்டுக் கொண்டார்.

