
புத்ராஜெயா, ஜன 28-
தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சு (KESUMA), “மலேசியா மாடானி (MADANI) பக்தி: தைப்பூசம் 2026” எனும் சிறப்பு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மனிதநேயம், சமூக மேம்பாடு, ஒருமைப்பாடு ஆகிய ‘மலேசியா மாடானி’ கோட்பாட்டின் அடிப்படையில், பொதுமக்களுக்கு சேவை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டுதல் வழங்கும் நோக்கில் இத்திட்டம் மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை நான்கு நாட்கள் கோலாலம்பூர், பத்துமலை திருத்தலத்தில் நடைபெறும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை KESUMA அமைச்சின் சேவை மையங்கள் செயல்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வாக, ஜனவரி 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தைப்பூச முன்னேற்பாடுகளை நேரில் பார்வையிட வருகை தரவுள்ளனர். இது ‘மலேசியா மாடானி’ தொலைநோக்கின் அடிப்படையில் நல்லிணக்கம், உள்ளடக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
பத்துமலையில் அமைக்கப்படும் KESUMA சிறப்பு சேவைப் பந்தலில், HRD Corp, PERKESO, PTPK, NIOSH மற்றும் TalentCorp ஆகிய அமைப்புகள் மூலம் சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பணியிடப் பாதுகாப்பு, கல்வி நிதி, தொழில் வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
நாட்டு மனிதவள மேம்பாடு மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு சேவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு மனிதவள அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

