
கோலாலம்பூர், பிப் 6-
பிப்ரவரி 7, 2026 அன்று தலைநகரில் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணியை மலேசிய இந்து சங்கம் மிகக் கடுமையாக கண்டிக்கிறது.
மலேசியா கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் நாடாக இருந்தாலும், அந்தச் சுதந்திரம் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும், மத மற்றும் இன ஒற்றுமையை பாதிக்கும் வகையிலும் பயன்படுத்தப்படக் கூடாது. இத்தகைய பேரணிகள், நாட்டின் அமைதிக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைந்து, மலேசியா மாடானி அரசின் நல்லிணக்கக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவை ஆகும்.
இந்தப் பேரணியால் உருவாகக்கூடிய எந்தவொரு எதிர்மறை சம்பவமும், மலேசியா மாடானி அரசைப் பற்றி தவறான கருத்துகளை உருவாக்கும் அபாயம் கொண்டது, மேலும் அரசின் ஒற்றுமை முயற்சிகளை பலவீனப்படுத்தும்.
2008 ஆம் ஆண்டு கிள்ளான், படாங் ஜாவாவில் ஏற்பட்ட வருந்தத்தக்க சம்பவம் மீண்டும் நிகழக் கூடாது என்பதில் மலேசிய இந்து சங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. அந்த நிகழ்வு நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே, இந்தப் பேரணியை நடத்த எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மலேசிய இந்து சங்கம் அரசையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வலியுறுத்துகிறது.உள்துறை அமைச்சு மற்றும் காவல்துறையினர் இதனை சீர்தூக்கிபார்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் சட்டம், உரையாடல் மற்றும் அரசமைப்பு வழிமுறைகளின் மூலமே தீர்க்கப்பட வேண்டும்.
மலேசிய இந்து சங்கம், மலேசிய MADANI அரசுடன் இணைந்து நாட்டின் அமைதி, சமூக ஒற்றுமை மற்றும் தேசிய மரியாதையை பாதுகாக்க தொடர்ந்து செயல்படும்.
நன்றி.
ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் AMN, ASA
தேசிய தலைவர்
மலேசிய இந்து சங்கம்

