
சுங்கை பூலோ, பிப் 15-
மலேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (சொக்சோ), கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 1.15 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு மொத்தம் 6.65 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு இழப்பீடுகளை வழங்கியுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தச் சிறப்பான செயல்பாடு, 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 6.1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான விநியோகத்தின் தொடர்ச்சியாகும். இது நாட்டின் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு மேலும் வலுவடைந்துள்ளதையும், அனைவரையும் உள்ளடக்கியதாகத் திகழ்வதையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
“கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இழப்பீடுகளின் தொகை 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.34 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், பயனாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட சுமார் 5.06 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகமானோர் இத்திட்டத்தில் பங்களிப்பு செய்வதை நாம் காண்கிறோம், அதுவே மிக முக்கியமானதாகும்.”

“இந்த இலக்கை எட்டுவதில் சொக்சோ நிர்வாகத்தின் பங்கு மகத்தானது. அவர்கள் முறையான நிர்வாக நெறிமுறைகளைப் பின்பற்றி மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று இங்கு தமது சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மைய வளாகத்தில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்ட ‘KESUMA PERKESO LINDUNG 2026’ சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் சொக்சோ தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமல் மற்றும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் முகமட் கம்ரி கமாருடின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமூகப் பாதுகாப்பு முறையானது தற்போதைய கால மாற்றத்திற்கு ஏற்ப ஆற்றல்மிக்கதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய, சொக்சோ இந்த ஆண்டு மூன்று முக்கிய கொள்கை சீர்திருத்தங்களை அமல்படுத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதில் முதலாவதாக, ‘LINDUNG 24 மணிநேரம்’ திட்டம் அமையும். இதன் மூலம் அலுவலக நேரத்திற்குப் பிறகும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். “விபத்துக்கள் அலுவலக நேரத்தைப் பார்த்து (Punch card) வருவதில்லை, எனவே பாதுகாப்பும் நேரக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கூடாது,” என்று அவர் விளக்கினார்.
இரண்டாவதாக, ‘கிக் தொழிலாளர்கள் சட்டம் 2025’ (சட்டம் 872). நெகிழ்வான வேலைகளை விரும்பும் இளைஞர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய இச்சட்டம் வழிவகுக்கும். மூன்றாவதாக, ‘LINDUNG Kendiri’ திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கான ‘பயணிகள் திட்டம்’ (Skim Pengembara) இந்த ஆண்டிற்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.
இன்றைய நிகழ்வில், 15 பங்களிப்பாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 42 வெள்ளி 84 காசு மதிப்பிலான சொக்சோ இழப்பீடுகள் வழங்கப்பட்டன. இதில் ‘LINDUNG Pekerja’ திட்டத்தின் கீழ் அறுவர், ‘LINDUNG Kerjaya’ திட்டத்தில் நால்வர், ‘LINDUNG Kendiri’ திட்டத்தில் மூவர் மற்றும் ‘LINDUNG Kasih’ திட்டத்தில் இருவர் அடங்குவர்.
மேலும், 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ‘ஆங் பாவ்’ வழங்கப்பட்டதுடன், 40 தனித்து வாழும் தாய்மார்கள் தந்தைமார்களுக்கு உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டன. சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக, சுங்கை பூலோ வட்டாரத்திலுள்ள 10 அரசு சாரா அமைப்புகளுக்கு (NGO) தலா 10,000 ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

