

கோலாலம்பூர் பிப் 15-
பெர்லிஸ் முதல் ஜோகூர் மாநிலம் வரை ஏறக்குறைய 1,200 ஆலயங்கள் உடைபடக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கின்றன என்று Malaysian Indian Hope Foundation தலைவர் டத்தோ இராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்து சமயத்தைச் சார்ந்த வழிபாட்டுத் தலங்கள் சொந்த நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளதா; முறையான நிர்வாகக் கட்டமைப்பு இருக்கிறதா; நிதி நிர்வாக நடைமுறை சீராக இருக்கிறதா; ஆலயம் புறம்போக்கு நிலத்தில் இருக்கிறதா; மரத்தடியில் வழிபாட்டுத் தலம் இருக்கிறதா; குடும்ப கோயிலா; ஆலய நிர்வாகக் குழுவில் குடும்ப உறுப்பினர்கள்- – உறவினர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனரா; மக்களிடையே பக்தியை வளர்க்கும் வகையில் ஆன்மீக நடைமுறைகள் செம்மையாக நடைபெறுகிறதா; அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் கணக்கறிக்கை நிர்வாகம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதா; உண்டியல் பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா; ஆலய நிர்வாக குழுவினர் பதவிக்காக சண்டையிடுகின்றனரா என்பதையெல்லாம் கணக்கிட்டு வரையறை செய்து நாட்டில் உள்ள ஆலயங்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.
மிகச்சிறந்த ஆலயங்கள் பச்சை நிறத்திலும் ஓரளவிற்கு சிறப்பாக செயல்படுகின்ற ஆலயங்கள் ஆரஞ்சு நிறத்திலும் எந்த வகையாலும் வகைப்படுத்த முடியாத சொந்த நிலத்தில் இல்லாத ஆலயங்கள் சிவப்பு வண்ணத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஓர் ஆலயம் 60 ஆண்டுகளாக சுதந்திர மலேசியாவில் செயல்படுகிறது. ஐந்தாறு தலைவர்கள் மாறிவிட்டனர். வழிபாட்டு சிலை ஐந்து – ஆறு அடி உயரத்தில் இருக்கிறது.
ஆனால் ஆலய நிர்வாகம் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ஆவணங்கள் எதுவுமே இல்லை. அந்த ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கான உரிமைத்தைப் பெற வேண்டும் என்ற முயற்சியும் இல்லை.
இப்படிப்பட்ட ஆலயங்கள் எல்லாம் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக டத்தோ இராமச்சந்திரன் தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது ஆலயங்கள் சம்பந்தமாக பரபரப்பும் பதற்றமும் நிலவு வருகின்ற நிலையில் நல்ல ஆலயங்களை காப்பாற்ற வேண்டும்.
ஆலய நிர்வாகத்தினருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதன் அடிப்படையில் மலேசிய இந்திய நம்பிக்கை அறவாரியத்தின்-Malaysian Indian Hope Foundation சார்பில் சமூக சமய ஆர்வலர்களும் ஆலய பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பெட்டாலின் ஜெயாவில் நடைபெற்றது.
மிகவும் சீராகவும் செம்மையாகவும் நடைபெறுகின்ற 500 ஆலயங்கள் பச்சை அடையாளத்துடன் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு சில ஆலயங்களில் செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில் பூசை நடப்பதில்லை. ஏதோ ஒரு திருவிழா என்றால் வசூல் செய்வதற்காக திடீரென்று புறப்பட்டு விடுகின்றனர்.
அப்படியெல்லாம் இல்லாமல் வாரந்தோறும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வருகின்றனரா என்பதெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்று இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்த அறவாரியத்தின் தலைவருமான டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.
மேலும் உடைபடும் அபாயத்தில் உள்ள கோவில்களை காப்பாற்ற இந்திய சமுதாயம் ஓர் அணியில் திரள வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை களைந்து நாம் ஓர் அணியில் திரண்டால் கண்டிப்பாக இந்த கோவில்களை காப்பாற்ற முடியும் என்று அவர் சொன்னார்.

