
சுங்கை பூலோ, மார்ச் 8 –
அரசாங்கமும் பல்வேறு தரப்பினரும் வழங்கி வரும் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்கள் தகுதியுள்ள அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்ய, பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
அரசாங்கம் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் உட்பட பல இளைஞர்கள் இத்தகைய திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து இன்னும் அறியாமல் இருப்பது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“நமது அமைச்சின் கீழ் பல திட்டங்கள் உள்ளன. உதாரணமாக, இன்று ‘யாயாசான் மஹிர்’ (Yayasan Mahir) அமைப்பு, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி (TVET) திட்டங்களை வழங்கி வருகிறது. இத்தகைய வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நேற்று இங்கு நடைபெற்ற திறன் மேம்பாட்டுத் துறை (JPK) உடனான உணவு கூடை மற்றும் ‘புபூர் லம்புக்’ விநியோக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் பேசுகையில், தகவல் பகிர்வின் முக்கியத்துவத்தை விளக்க ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டார்.
“டேலண்ட் கார்ப் (TalentCorp) ஒத்துழைப்புடன் சுங்கை பூலோவில் சுமார் 700 பேருக்கு இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் இத்தகைய உயர்தரப் பயிற்சிகளுக்கு சுமார் 5,000 வெள்ளி வரை செலவாகும். ஆனால், முறையான தகவல் சென்றடைந்ததால் மட்டுமே நமது மக்கள் இதனை இலவசமாகப் பெற முடிந்தது,” என்றார் அவர்.

முன்னதாக, ரமணன் அப்பகுதியில் உள்ள பி40 பிரிவினர் மற்றும் வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகளையும் புபூர் லம்புக் பொட்டலங்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரமலான் சந்தைக்குச் சென்ற அவர், அங்குள்ள பொதுமக்களுக்கு 1,000 புபூர் லம்புக் பொட்டலங்களையும் சிறுவர்களுக்கு ‘டுவிட் ராயா’ பண முடிப்புகளையும் வழங்கி மகிழ்வித்தார்.
இந்நிகழ்வில் மனிதவள அமைச்சின் துணைச் செயலாளர் சுதெக்னோ அகமட் பெலோன் மற்றும் யாயாசான் மஹிர் மலேசியா தலைவர் டத்தோஸ்ரீ கணேஷ் பழனியப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

