
நோன்பு (பசி) என்பது வெறும் பசியும் தாகமும் மட்டுமல்ல, அது மனிதனுக்கு இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பாவங்களைத் தவிர்த்து, இறையச்சத்தை (தக்வா) வளர்க்கும் ஒரு ஆன்மீகப் பயிற்சியாகும். திருக்குர்ஆனின் 2:183 வசனப்படி, தங்களை நரகிலிருந்து பாதுகாத்து, நேர்வழியில் நடப்பதற்காக, பசி மற்றும் இச்சைகளைக் கட்டுப்படுத்தி இறையச்சம் உடையவர்களாக ஆவதே நோன்பின் முதன்மை நோக்கம்.
பசி கற்பிக்கும் இறையச்சம் – முக்கிய அம்சங்கள்:
கட்டுப்பாடு (Self-Control): பசி, தாகம் இருந்தும், இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன், மறைவான இடங்களிலும் உணவை உண்ணாமல் தவிர்ப்பது.
படைத்தவனின் கட்டளை: பசியின் கொடுமையை உணர்வதை விட, “அல்லாஹ் கட்டளையிட்டான்” என்பதற்காக இச்சைகளை அடக்குவது உண்மையான இறையச்சத்தைக் கற்பிக்கிறது.
பாவங்களிலிருந்து பாதுகாப்பு: உண்ணும் உணவை மட்டுமல்லாது, பொய், புறம், தீய செயல்களையும் தவிர்த்து, நாவையும், உள்ளத்தையும் காக்கப் பழக்குகிறது.
ஏழைகளின் நிலை: பசி உணர்வின் மூலம், பசியால் வாடும் ஏழைகளின் நிலையை அறிந்து, அவர்கள் மீது இரக்கம் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தவும் தூண்டுகிறது.
சுருக்கமாக, நோன்பு என்பது உடல் பசியைப் பக்குவப்படுத்தி, உள்ளத்தில் இறையச்சத்தை நிலைநிறுத்தும் ஒரு கேடயமாகும்.
வாழ்கை நமக்கு பல வழிகளில் பாடம் கற்பிக்கும். அதில் மிகவும் முக்கியமான ஒன்று வறுமை, அதனால் உண்டாகும் முதல் வலி பசி. உற்றார்,உறவினர், நல்லோர், தீயோர் இது மாறி பல விஷயங்களை நமக்கு சொல்லி கொடுக்கும்.
நம்மைப் படைத்த அல்லாஹ் மனிதர்களை ரமளான் மாதம் முழுக்க நோன்பிருக்கக் கூறியது வெறுமனே பசியின் பெரும்வலியை உணர்ந்துகொள்வதற்காக மாத்திரமல்ல. மாறாக ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும் குன்றாத தக்வா எனும் இறையச்சத்தை ஆழமாகப் பதியச் செய்யவே ஆகும்.
’இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்’ (திருக்குர்ஆன் 2:183) என்ற வசனத்தின் மூலம் இதனைத் தெளிவாக அறிய முடியும்.
ஒருநாள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள், ’எதற்காக நாம் உணவையும் தண்ணீரையும் தவிர்த்து நோன்பிருக்கிறோம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு உபை இப்னு கஅப்(ரலி) ’இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காக!’ என்று பதிலளித்தார். ’இறையச்சம் என்றால் என்ன? என அவர் மீண்டும் வினவ, ’நீங்கள் என்றாவது முட்கள் நிறைந்த பாதையில் நடந்துள்ளீர்களா?’ என்று உபை கேட்டார். அதற்கு உமர் பின் கத்தாப்(ரலி) ’ஆம், நடந்துள்ளேன்!’ எனப் பதிலளித்தார்.
’எப்படி நடந்தீர்கள்?’ என்று உபை(ரலி) கேட்க, உமர்(ரலி) ’எனது உடைகளை நன்றாக மேலே தூக்கிச் சுருட்டிக்கொண்டு காலில் முட்கள் குத்தாதவாறு முட்கள் இல்லாத இடத்தில் பார்த்து கால்களை ஊன்றி எச்சரிக்கையாக நடப்பேன்’ என்றவுடன். ’ஆம்! அதுதான் தக்வா எனும் இறையச்சம்!’ என்று விளக்கமளித்தார்.
நடக்கும் பாதையில் முட்கள் இல்லாத இடமாகப் பார்த்து எச்சரிக்கையாக அடியெடுத்து வைத்து நடப்பதுபோலத்தான் நாம் புனிதமான ரமளான் மாதத்தில் பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், அந்நியப் பெண்களை, அந்நிய ஆண்களை நாடுதல், பெற்றோரை அவமதித்தல், புறம் பேசுதல், கோள் மூட்டுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல் போன்ற அல்லாஹ் தடுத்த தீய பழக்கங்களில் இருந்து எச்சரிக்கையாக விலகியிருக்க வேண்டும். பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் பசியையும் தாகத்தையும் பொறுத்துக்கொண்டு இறைநினைவில் அவனையே வணங்கி அவனிடமே பாவமன்னிப்புக் கேட்டு நல்வழிக்கு மீள்வதே தக்வா ஆகும்.
இப்படியான இறையச்சத்தை ரமளான் முழுக்க கடைப்பிடிக்க முடிந்த ஒருவரால் நிச்சயமாக அதனை தன் வாழ்நாள் முழுக்க கடைப்பிடித்து ஒழுக முடியும்தானே? அல்லாஹ் நமக்கு ரமளானில் மட்டும் பசியையும் தாகத்தையும் பொறுத்திருக்கக் கூறினான். ’அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள். வரம்புகளை முறிப்பதிலிருந்து விலகி இருப்பவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.'(திருக்குர்ஆன் 2:194)
’அவ்வாறல்ல, (அவர்கள் ஏன் விசாரிக்கப் படக் கூடாது?) எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக்கொள்கின்றாரோ அவரே, அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராவார். ஏனெனில், தீவினையிலிருந்து விலகிக் கொள்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்’. (திருக்குர்ஆன் 3:76)
’அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு அவர்களால் எந்தப் பயனும் தர முடியாது. மேலும், கொடுமைபுரிபவர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். மேலும், இறையச்சமுடையோர்க்கு அல்லாஹ் தோழனாக இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 45:19)
’மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)கு ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன்’ (திருக்குர்ஆன் 65: 2,3)
மேற்குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களின் வாயிலாக தன் மீது அச்சமுடைய அடியாருக்கு அவன் வேண்டியதைச் செய்கிறான். ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு இருக்க வேண்டிய மிகமுக்கிய அம்சம் தக்வா எனும் இறையச்சமாகும். ரமளான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்க மாண்புகளைத் தம் வாழ்நாள் முழுமைக்கும் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.
—————————————-
கிம்மா தேசியத் தலைவர்: டத்தோ ஸ்ரீ அல்ஹாஜ் சையது இப்ராஹீம் பின் காதிர்

