போரை நிறுத்த 3 நிபந்தனைகள் ஈரான் அதிரடி அறிவிப்பு

டெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்கா தொடர் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் போரை நிறுத்த 3 நிபந்தனைகளை ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் நீடித்து வருவதால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் மூடியது. அதுமட்டுமல்லாமல் ஹார்முஸ் நீரிணையில் எந்த கப்பல் வந்தாலும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்தது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை வைக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் 16 கண்ணிவெடி போர்க்கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இத்தகவலை அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் 3 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இங்கிலாந்து ராணுவத்தால் நடத்தப்படும் ஐக்கிய ராஜ்ஜிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் நேற்று அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், ஹார்முஸ் வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்துள்ளதால் ஈரான் ராணுவமே தாக்குதல் நடத்தியிருக்கும் என நம்பப்படுகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

இந்த போர் இன்று 13வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியன், 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.

மேலும், வளைகுடா அரபு நாடுகளுக்கு எதிரான டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், நேற்றிரவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்கவும், எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை தெஹ்ரான் விரும்புகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles