
புத்ராஜெயா, மார்ச் 31 –
நாட்டில் கிக் பொருளாதாரத்தில் (Gig Economy) ஈடுபட்டுள்ள 1.64 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில், 2025-ஆம் ஆண்டு கிக் பணியாளர்கள் சட்டம் (சட்டம் 872) இன்று செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தின் வழி, கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சேவை ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், பாகுபாடுகளைத் தடுத்தல், மற்றும் பணியிடப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (PERKESO) மூலம் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதம், மலேசிய தொழில்துறை உறவுகள் துறை (JPPM) மற்றும் கிக் பணியாளர் தீர்ப்பாயம் வழியாகப் புகார்களுக்குத் தெளிவான தீர்வுகளைப் பெறுவதையும் இச்சட்டம் உறுதி செய்கிறது.
இன்று இங்குள்ள மனிதவள அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், “கிக் பணியாளர்கள் இனி தங்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இந்தச் சட்டம் அவர்களுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பை வழங்குவதோடு, அவர்களின் பணி நெகிழ்வுத்தன்மையையோ அல்லது கிக் பொருளாதாரத்தின் தற்போதைய சூழலையோ எந்த விதத்திலும் பாதிக்காது” என்று உறுதியளித்தார்.

அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் உலகளாவிய நடைமுறைகளை விரிவாக ஆய்வு செய்த பின்னரே, மலேசியா இந்தச் சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சட்டத்தின் கீழ் ‘கிக் பணியாளர்’ என்பவர் மலேசியக் குடிமகனாக அல்லது நிரந்தர குடியிருப்பாளராக (PR) இருக்க வேண்டும். அவர்கள் பிளாட்பார்ம் (Platform) நிறுவனங்கள் அல்லது பிளாட்பார்ம் அல்லாத நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, ஒவ்வொரு சேவைக்கும் வருமானம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
“ஈ-ஹெய்லிங் (E-hailing) மற்றும் பி-ஹெய்லிங் (P-hailing) பணியாளர்கள் பிளாட்பார்ம் சார்ந்த பணியாளர்கள் ஆவர். அதே சமயம், நடிப்பு, திரைப்படம், இசை, மொழிபெயர்ப்பு, இதழியல் போன்ற ஒன்பது முக்கிய சேவைத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோர் பிளாட்பார்ம் அல்லாத கிக் பணியாளர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் விளக்கினார்.

இச்சட்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் (PR) சேர்க்கப்பட்டது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அனைத்து வகை கிக் பணியாளர்களுக்கும் விரிவான பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
மேலும், அரசாங்கம், பணியாளர்கள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய முத்தரப்பு அமைப்பான ‘கிக் ஆலோசனை மன்றம்’ (MPGIG) இச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச வருமான விகிதம் மற்றும் தரநிலைகள் குறித்து அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்கும்.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 26 உறுப்பினர்கள் ஏப்ரல் 1 முதல் பணியைத் தொடங்குவர் என்றும், அதன் முதல் கூட்டம் ஏப்ரல் 3 அன்று நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கிக் பணியாளர்களின் வருமான விகிதம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இந்த மன்றத்தின் முதன்மை இலக்காகும்.
நாட்டின் கிக் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்க ‘மலேசிய கிக் பொருளாதார ஆணையம்’ (SEGiM) உருவாக்கப்படுவதற்கும் அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
இது கிக் சூழல் அமைப்பை முறையாக நிர்வகிக்கவும், கொள்கைகளை வகுக்கவும் உதவும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்.
பணியாளர்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்க ஏப்ரல் 1 முதல் https://eaduan-gig.mohr.gov.my/ என்ற இணையதளம் வழியாக ‘ஈ-புகார்’ (e-Aduan) வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
‘தவறான கதவு இல்லை’ (No Wrong Door Policy) கொள்கையின்படி, பணியாளர்கள் மனிதவள அமைச்சின் கீழ் உள்ள எந்தவொரு கிளை அலுவலகத்திற்கும் சென்று நேரடியாகப் புகார் அளிக்கலாம்.
இப்புகார்கள் அதிகபட்சமாக 21 வேலை நாட்களுக்குள் தீர்க்கப்படும் என்று அமைச்சர் உறுதி கூறினார்.
2024-இல் தொடங்கப்பட்ட இச்சட்ட வரைவுப் பணிகள், பல்வேறு அமைச்சகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் 3,800-க்கும் மேற்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்ட 37 கட்ட கலந்தாய்வுகளுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

