பிடிபிகே (PTPK) வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர், ஏப்ரல் 1 –
நாட்டின் மனித மூலதன மேம்பாட்டை மிகவும் உத்திபூர்வமான மற்றும் உயர்தரத் திறன் பயிற்சியின் மூலம் வலுப்படுத்தும் முயற்சியாக, திறன் மேம்பாட்டு நிதி நிறுவனம் (PTPK) வாரிய உறுப்பினர்களாக இரு அனுபவமிக்க நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

பிடிபிகே வாரிய உறுப்பினராகவும், அதன் துணைத் தலைவராகவும் ரமேல் ஆஷ்ரம் ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அஹ்ஸிம் ஜமாத் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திறன் பயிற்சி நிதிக்கான அணுகலை விரிவுபடுத்துவது மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை அதிகரிப்பது உள்ளிட்ட நாட்டின் திறன் பயிற்சி சூழலியலை மேம்படுத்துவதில் பிடிபிகே ஒரு முதன்மை நிறுவனமாகத் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த நியமனங்கள் அமைந்துள்ளதாக டத்தோஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

“நிர்வாகத் திறனை வலுப்படுத்துவதற்கும், திறன் பயிற்சி தொடர்பான நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தொழில்துறை அனுபவம் மற்றும் நடைமுறை நிபுணத்துவம் வாய்ந்த தலைமையின் அவசியத்தை இந்த நியமனங்கள் பிரதிபலிக்கின்றன,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவரின் ஒருங்கிணைந்த அனுபவம் மற்றும் நிபுணத்துவம், நாட்டின் திறமையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை நனவாக்குவதிலும், அதிக வருமானம் கொண்ட மற்றும் திறன் அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கிய மலேசியாவின் அபிலாஷைகளை ஆதரிப்பதிலும் பிடிபிகே-வுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரமேல் ஆஷ்ரம் கார்ப்பரேட் துறையில், குறிப்பாக திறன் பயிற்சி மற்றும் திறமையாளர் மேம்பாட்டுத் துறையில் பரந்த அனுபவம் கொண்டவர். பிடிபிகே-வின் உத்திபூர்வ திசையை வலுப்படுத்துவதிலும், பயிற்சி நிதி திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துவதிலும், தொழில்துறை தேவைகளுக்கும் நாட்டின் பணியாளர் மேம்பாட்டிற்கும் இடையே இணக்கத்தை உறுதி செய்வதிலும் அவரது பின்னணி முக்கியப் பங்காற்றும்.

அதேவேளையில், அஹ்ஸிம் ஜமாத் தொழிலாளர் திறன் பயிற்சித் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டில் ஆழமான நிபுணத்துவம் பெற்றவர். இது உள்ளடக்கிய மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் கொள்கைத் திட்டமிடலை வலுப்படுத்துவதற்கும் உதவும்.

சவாலான மற்றும் போட்டித்தன்மை மிக்க தற்போதைய பொருளாதாரச் சூழலில், உள்ளூர் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, உலகத் தரத்தில் போட்டியிடக்கூடிய திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் பிடிபிகே முக்கியப் பங்காற்றுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles