

பீடோர்,ஏப்01: இங்குள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் நீண்டக்காலக் கோரிக்கையான நவீன மின்சுடலை பிரச்னைக்குத் மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் முஸ்லிம் அல்லாதவர் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தலைமையில் நிறைவான தீர்வுகாணப்பட்டது.
வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 10 நிமிடப் பயணத்தூரத்தில் 1.3 ஏக்கர் நிலத்தில் வெ.3 மில்லியன் செலவில் நவீன மின்சுடலை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை டத்தோ சிவநேசன் தலைமையில் நிறைவாக நடந்தேறியதன் வாயிலாக மக்களின் நீண்டக்கால கோரிக்கைக்கு விடியல் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அல்லாதவர்களுக்காக உருவாக்கப்படும் இந்த நவீன மின்சுடலையின் கட்டுமானப்பணி அடுத்த ஐந்து மாதங்களில் நிறைவு பெறும் எனவும் நடப்பு சூழலில் 2 எரியூட்டும் அடுப்புகளுடன் உருவாக்கப்படும் இந்த மின்சுடலையில் பிறகு மூன்றாவது எரியூட்டும் அடுப்பும் இணைக்கப்படும் என்றார்.
மிகவும் சிறந்த முறையில் நவீன தொழில்நுட்ப உருவாக்கத்தோடு அமையவிருக்கும் பீடோர் நவீன மின்சுடலை பல்லினத்தைச் சார்ந்த முஸ்லிம் அல்லாதவர்கள் ஒன்றிணைந்து பராமரிக்கப்படும் வகையில் அதன் செயற்குழு அமைந்திருக்கும் எனவும் இங்குள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் மின்சுடலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவின் போது சீனர்கள்,சீக்கியர்கள் உட்பட இந்துகள் என அவரவர் சமய நம்பிக்கைப்படி பூஜைகளும் நடந்தேறின என்றும் டத்தோ சிவநேசன் சுட்டிக்காண்பித்தார்.
தஞ்சோங் மாலிம் தொடங்கி தாப்பா வரை இவ்வட்டாரங்களில் நவீன மின்சுடலை இல்லை என்னும் சூழலுக்கு இன்னும் ஐந்து மாதத்தில் தீர்வு கிட்டிவிடும் எனவும் குறிப்பிட்ட டத்தோ சிவநேசன் தற்போதைய சூழலில் இறப்பு நிகழ்ந்தால் இங்குள்ள மக்கள் கம்பார்.தெலுக் இந்தான் ஆகிய இடங்களுக்கு பிரேதத்தை எரியூட்ட எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார்.
மேலும்,தைப்பிங்,புந்தோங்,மஞ்சோங்,தெலுக் இந்தான் ஆகிய இடங்களுக்கு அடுத்து பீடோரில் நவீன மின்சுடலை அமையவிருக்கும் நிலையில் தஞ்சோங் மாலிம் தொடங்கி தாப்பா வரையிலான மக்கள் மட்டுமின்றி சிலாங்கூரின் உலுபெர்ணம் அதனை ஒட்டி அமைந்துள்ள மக்களும் இந்த மின்சுடலையைப் பயன்படுத்துவர் என்றார்.
பொதுமக்களிடம் எந்தவொரு நிதியும் வசூலிக்காமல் முழுமுழுக்க அரசு மானியத்தில் இந்த மின்சுடலை கட்டப்படுவதாகவும் தற்போதையச் சூழலில் வெ.3 மில்லியன் என வரையறுக்கப்பட்டிருந்தாலும் மூன்றாவது எரியூட்டு அடுப்பு உட்பட மேலும் சில கட்டுமானப்பணி,நடவடிக்கைகளையும் கணக்கிடும் போது அந்தத் தொகை 3 மில்லியனை விட கூடுதலாக அமையலாம் என்றும் விவரித்தார்.
இன்று காலை மிகவும் நேர்த்தியான சமயம் சார்ந்தும் நிறைவான அமைந்த அடிக்கல் நாட்டுவிழாவில் சீக்கியர்கள்,சீனர்கள்,கிருஸ்துவர்கள் உட்பட இந்து சங்கம்,ஆலய பிரதிநிதிகள்,பொது மக்கள்,பொது அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

