
மா.பவளச்செல்வம்
ரந்தாவ், ஏப்ரல் 3-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில்
ரந்தாவ் கம்போங் உலு சாவா ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் வால் முனீஸ்வரர் சிவபெருமான் மகா கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 9.36 மணி முதல் 10.58 வரை மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது என்று ஆலய ஸ்தாபகர் அப்பர் முருகவேல் தெரிவித்தார்.
மலேசியத் திருநாட்டில் பேபி சிவன் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் 52 அடி உயரத்தில் கம்பீரமாக வால்முனி சிவபெருமான் சிலை கட்டப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த மகா கும்பாபிஷேகத்தை பிரதிஷ்டா திலகம், கும்பாபிஷேக ரத்னா சில ஆகம கிரிய பூஷணம் சிவ ஸ்ரீ ஆனந்தவர்த்தன அகோர சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் ஆகம முறைப்படி மகா நடைபெறுகிறது என்று அப்பர் முருகவேல் தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கும்.

அதனைத் தொடர்ந்து
ஏப்ரல் 12 ஆம். தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை காண நாடு தழுவிய அளவில் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்படும் என்று அவர் சொன்னார்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மகா கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
52 அடி உயரத்தில் கட்டப்பட்டு மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கும் வால்முனி சிவபெருமான் சிலை பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்று அவர் சொன்னார்.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று ஆலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஆலயத் துணை தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பிரேம்குமார், கவிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

